நேர்மையானவர்களால் அரசியலில் தொடர்ந்து நீடிக்கவே முடியாது: ஈவிகேஎஸ்

evks

நேர்மையானவர்களால் அரசியலில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கூடுதல் பள்ளிக் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, “இந்த கிராமத்தையும், மக்களையும் பார்க்கும் போது அரசியலில் இருந்து ஒதுங்கி இந்த கிராமத்திலேயே தங்கிவிடலாம் என்று ஆவலாக உள்ளது. நேர்மையாக இருப்பவர்களால் அரசியலில் இருக்க முடியாது.

காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். தற்போது எம்.பி., எம்.எல்.ஏ., ஆவதற்கு கல்வி தகுதி தேவையில்லை. தேர்தலுக்கு முன்பு பணத்தை வீசினால் எம்எல்ஏ ஆகிவிடலாம்.

காமராஜர் இல்லையென்றால் நாடு முன்னேறி இருக்குமா? கிராமப் பகுதி மக்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வெளியூர்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். பணம் படைத்தவர்கள் மட்டுமே கல்வி அறிவு பெறமுடியும் என்ற நிலையை மாற்றி ஏழை எளியவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் காமராஜர்.

காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 10 ஆண்டுகள் சுதந்திரத்துக்காக சிறையில் இருந்தார். தியாகம் செய்துவிட்டு காமராஜர் சிறைக்கு சென்றார். ஆனால் இப்போதுள்ளவர்கள் எதற்காக சிறை செல்கிறார்கள் என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்” என்றார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, தாம் ‘மவுன விரதம்’ இருப்பதாகவும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸுக்குதான் வாக்கு அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top