இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இங்கு பணியாற்றுகிறார்கள்! மருத்துவர் எழிலன் பேட்டி

மருத்துவ கல்விக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று அறவித்த, பின் பல  மாநிலங்கள் அதனை எதிர்த்து மேல் முறையிடு செய்தன. எனவே, இந்த ஆண்டுக்கு மட்டும் இல்லை என்ற சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவ உயர் படிப்புகளுக்கான மாநில அரசின் இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடையினை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. ஏற்கனவே மருத்துவம் MBBS, BDS போன்ற  படிப்புகளில் 15 சதவீதமும், M.D போன்ற மேல் படிப்பில் 50 சதவீதமும் மத்திய அரசின் பட்டியலுக்கு சென்றுவிடும் சூழலில் இந்த புதிய நுழைவுத்தேர்வும் மாநில இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்பும் தமிழக மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான  மருத்துவர் எழிலன் நேர்காணல் செய்தபோது விளக்குகிறார்.

13336057_10206412462046222_4557677009579872349_n

தமிழகத்தின் இட ஒதுக்கீட்டின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது அதுவும் பாரதிய ஜனதா  ஆட்சிக்கு வந்த பின் இன்னும் அது கூர்மை படுத்தப்படுகிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது ?

இது இடஒதுக்கீடு அல்ல; அது இடப்பங்கீடு. நாம் யாருக்கும் ஒதுக்கி கொடுக்கவில்லை. பங்கிட்டு கொடுக்கிறோம். சமூகத்தினை  பிறப்பின் அடிப்படையில் படி நிலையாக பிரித்து வழங்குகிறோம். 2000 வருடமாக  கல்வி மறுக்கப்பட்டு இருந்ததை மாற்றி சம நிலை சமூகத்தினை உருவாக்கும் பாதையில் ஒரு கூறு தான் இந்த சமூக நீதி போராட்டம். இதன் மூலமாக சமூக மாற்றங்கள் சம நிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்கு ஆதிக்க சக்திகள் முனைப்போடு செயல்படுகிறார்கள். அதற்கு ஊடகங்கள், ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் என அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். உடல் உழைப்பு தொழிலாளிகளின் குழந்தைகள்  தொழிற்நுட்ப கல்வி, மருத்துவக் கல்வி பெற்று அதிகாரிகளாக வந்து விடக்  கூடாது; தனக்கு நிகராக வந்து விடக்கூடாது என கீழ்தரமான எண்ணத்தில் இருந்து தான் இந்த எதிர்ப்புகள் வருகிறது.

இதனை நம் மாணவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதி இடஒதுக்கீடு குறித்த  தாழ்வு மனப்பான்மையை உடைத்து எரிந்து உரிமை முழக்கமாக முன் வைக்க வேண்டும். அதற்கு நாம் சமூக நீதி போராட்டத்தின் வரலாற்றை அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராக இங்கு நீதி கட்சி உருவானது. நீதி கட்சியில் பார்ப்பனர் அல்லோதார் ஒன்றிணைந்து வந்தனர். அதே காலக்கட்டத்தில் காங்கிரஸ்காரர்கள்  வெள்ளையருக்கு எதிரானவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு பார்பனர் ஆட்சியையே நிலை நிறுத்துவதில் குறியாக இருந்தனர். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உழைப்பும் போராட்டமும் காங்கிரஸ்காரர்களுக்கு தேவையாக இருந்தது. ஆனால், அவர்களை கல்வி, வேலை வாய்ப்பில் அனுமதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இதனால் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்வைத்து பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

1927 இல் நீதி கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்தை நிறைவேற்றிய பின் மக்கள் தொகை அடிப்படையில் இடப்பங்கீடு கொடுக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த உடனே இதனை  எதிர்த்து செண்பகம் துரைராஜ் என்பவர் ஒரு போலி அபிடவிட் தாக்கல் செய்தார். இதில் கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். இதனை  எதிர்த்து மிக பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. பெரியார், காமராஜர், அண்ணா என எல்லோரும் போராட்டங்களை முன்னெடுத்து சென்றனர். தமிழகம் முழுவதும் மிக பெரிய போராட்டங்கள் நடைப்பெற்றது. 1950 டிசம்பர் முதல் தேதியன்று திருச்சியில் ‘கம்யூனல் ஜி.ஓ. மாநாடு’ ஒன்றைக் கூட்டினர். ‘கல்வி, அரசியல் உத்தியோகங்களில் பின்தங்கிய மக்களுக்கு ஜனத்தொகை விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு செய்யும் வகையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடமளித்து அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். அதன் பின் தான் முதல் அரசியல் அமைப்புச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்பில் 69% இட ஒதிக்கீடு இருக்கிறது. இந்த சமூகத்தில் எந்த விதமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது?

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வரலாறும் ஒரு பின்னணியும் இருக்கும். அதே போல தமிழகம் சமூக நீதி கொள்கையிலும் ஒவ்வொரு மாநிலமும் அங்குள்ள சமூக ஏற்ற தாழ்வை கணக்கில் கொண்டு ஒவ்வோரு கொள்கை வைத்திருக்கிறார்கள்.

69% இடப்பங்கீட்டின் வழியாக தமிழக  கல்லூரிகளில் படித்தவர்கள் 80 சதவிகிதத்திற்கும் மேலாக  தமிழகத்தில் தான் பணி புரிகிறார்கள். இங்கு அதிகமாக படிப்பவர்கள் பல்வேறு சமூகத்தில் இருந்து வருவதால் அவர்கள் பெறும்பாலும் வெளிநாடுகளுக்கு பணி செய்ய செல்வது இல்லை.இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணி புரிகிறார்கள்; தனியாக கிளினிக் வைத்துள்ளார்கள். இதனால், தான் தமிழகத்தில் மருத்துவ திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடிகிறது.

வட இந்தியாவில் படிப்பவர்களில் 80%சதவீதம் மேல் சாதிக்காரர்கள். மற்றவர்கள் நுழையவே முடியாது. எய்ம்ஸ் ஒரு மத்திய அரசு நிறுவனம் 550 கோடி ஒவ்வொரு ஆண்டும் அதுக்கு  ஒதுக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு வரை அங்கு இடஒதுக்கீடு கிடையாது. ஒரு ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது என்றால் எய்ம்ஸில் படித்தவர்கள் 56% பேர் இந்த நாட்டில் இல்லை. அமெரிக்காவிற்கும், லண்டனுக்கும் மேல் படிக்க சென்று அங்கேயே பணிபுரிவதாக சொல்லுகிறது. இது தான் ஐ.ஐ.டி , ஐ.ஐ.எம் என எல்லா மத்திய அரசு நிறுவனங்களிலும் இந்த நாட்டு மக்களின் வரி பணத்தில் படித்து விட்டு வெளிநாடுகளுக்கு பணம் சம்பாத்திக்க செல்கிறார்கள்; இந்த  இடப்பங்கீட்டிற்கு எதிரான மேல் சாதிக்காரர்கள்.

AIIMS

ஆனால், தமிழத்தில் இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் 80% இங்கு தான் பணியாற்றுகிறார்கள். இதே போல தமிழகத்தில் நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட நரம்பியல் நிபுணரை (phrenologist) பார்க்கலாம் இதய நிபுணரை (cardiologist) பார்க்கலாம். எல்லா வகையான சிறப்பு மருத்துவர்களையும் எல்லா  சமூகங்களிலும் பார்க்கலாம். அதேபோல, மலம் அல்லுவதுதான் உன் தொழில் என்று ஒடுக்கப்பட்டஅருந்ததியர்கள் சமூகத்தில் இருந்து வருடத்திற்கு 40 மருத்துவர்கள் வருகிறார்கள். அவர்களில் சிறப்பு மருத்துவர்கள் வருகிறார்கள். அவர்கள் இங்கு தான் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்தியாவில் மேற்படிப்புக்கு தேர்வு எழுதுவார்கள் அல்லது தமிழக அரசு பணிக்கு தேர்வு எழுதுவார்கள். ஒரு பத்து சதவிதம் மட்டும் தான் வெளி நாடுகளுக்கு செல்வார்கள். இதில் வெளி நாடுகளுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மேல் சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான்.

காலங்காலமாக இங்கு செருப்பு தைக்கும் தொழிலாளியாக கூலித் தொழிலாளியாக இருந்தவர்களின் பிள்ளைகள் மேற்படிப்புக்கு வர கூடாது என்கிறதா இந்த உச்ச நீதி மன்றம்? மார்க் களண்டர் என்பவர் இந்திய நீதி மன்றங்கள் குறித்து ஒரு ஆய்வு செய்தார். அவர் சுதந்திரத்திற்கு பின் சமூக நீதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளில் 84 முதல் 86 சதவீதம் வரை சமூக நீதிக்கு எதிராக தான் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இவர்கள் யாரும் உண்மைகளை பார்ப்பது இல்லை, தங்கள் சொந்த அபிப்ராயத்தை தான் முன் வைக்கிறார்கள் என்றும் அவர் சொல்லுகிறார். இதனால் தான் நாம் நீதித் துறையிலும் சமூக நீதி இடப்பங்கீடு கேட்கிறோம். இந்த தீர்பின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையிலான இடஒதுக்கீட்டை அடித்து காலி செய்ய வேண்டும் என்பது தான் அவர்களது நோக்கம். இந்தியா முழுவதும் ஒரே பொது திட்டம்ம், ஒரே கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று சொல்லும் உச்ச நீதி மன்றம் எல்லா மருத்துவ கல்லூரிகளுக்கும் ஒரே நிதி ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யுமா? இந்த தீர்ப்பில் வட கிழக்கு பகுதிகளில் சிறப்பு மருத்துவர்களே இல்லை அதையெல்லாம் சரி செய்ய தான் இது என்று கூறி உள்ளனர். இடபங்கீட்டை எடுத்துவிட்டால் யார் படிப்பார்கள்? அந்த எய்ம்சில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தான் படிப்பார்கள். அவர்கள் வட கிழக்கு பகுதியில் வந்து பணி செய்யப்போகிறார்களா?

‘நீட்’ தேர்வு வந்த போது ஒரு அசாம் எம்பி சொன்னார். இந்த தேர்வு வேண்டாம் இப்பொழுது தான் எங்கள் மாணவர்கள் படிக்க வருகிறார்கள். அவர்கள் வரும் போதுதான் எங்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும் என்று தெளிவாக சொன்னார். மேலும், மாநில உரிமைகளை பறித்து கூட்டாச்சி தத்ததுவத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த மண்ணில் உள்ள மக்களுக்கு பணி செய்பவர்களுக்கு வாய்ப்புகளை மறுத்து, இந்த நாடே வேண்டாம் என்று வெளியேறுபவர்களுக்கு வாய்ப்பை  உருவாக்கி கொடுக்கிறார்கள். இங்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பணியா முதலாளிகள், ஆப்ரிக்க நாடுகளில் தங்கள் தொழில் துவங்கும் போது அந்த அரசுகளின் சட்டப்படி அந்த மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சட்டத்தில் கையெழுத்து போடுகிறார்கள்.

அரசு பள்ளி, மெட்ரிகுலேசன், CBSC என பல கல்வி முறைகள் இருக்கும் சூழலில் இந்த  நீட் தேர்வு கிராமப்புற பிற்ப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எந்த மாதிரி பாதிப்புகளை கொடுக்கும்?

நீட் கொண்டு வருவதற்கு காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சொன்னார்கள். ஆனால், இப்பொழுது தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை  உயர்த்தியிருக்கிறது. இதுவும் ஒரு பொய்யான காரணம் தான். அதே போல தேர்வு தான் வைக்கிறோம். இடஒதுக்கீட்டை நாங்கள் எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். ஆனால், ‘இந்த தேர்வை யார் எழுத முடியும்? மருத்துவம் படிக்க ஒரு தகுதி வேண்டுமே? மருத்துவம் தகுதி இல்லாமல் போயிருமே?’ என்கிறார்கள். சமூக நீதி இடபங்கிடு தமிழகத்தில் 1920 ல் இருந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் மிக சிறந்த மருத்துவர்கள் இருகிறார்கள். சென்னையை medical hub என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் பேருகால மரணங்கள் இந்தியாவிலேயே குறைவு. குழந்தை இறப்பு விகிதம் தாய் இறப்பு விகிதம் கட்டுபடுத்தியதில் தமிழகம் தான் முதலிடம். அதில் அதிகமாக அரசு மருத்துவமனையில் தான் நடக்கிறது. சிறுநீரக அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சையில் தமிழகம் தான் முதலிடம். இது எல்லாம் இந்த சமூக நீதி இட பங்கீடு தான் தந்து இருக்கிறது. மருத்துவம் சென்றடையாத, தடுப்பூசிகள் சென்றடையாத கிராமங்கள் மிக குறைவு. இது எல்லாமே சமூக நீதியின் பலன்.

இங்கு இட பங்கீடு என்பது நுழைவுக்குதான். படிப்புக்கோ, தேர்வுக்கோ இல்லை உள்ளே பயிற்சி, தேர்வு எல்லாம் ஒன்று தான். அங்கு ஏற்ற இறக்கங்களும் இல்லை. அதில் இருந்தால் தகுதி பற்றி பேசுவதில் அர்த்தம் இருக்கிறது.

அங்கும் கொடுத்து இருக்கிறார்கள். எப்போது என்றால், வெள்ளையர்கள் முதல் முறையாக ICS தேர்வு வைத்தார்கள். அது எழுதிய பெரும்பாலானோர் பார்ப்பனர்கள் தான். அதை எழுதியவர்கள் யாரும் 35 சதவீதத்தை தாண்டவில்லை. அப்பொழுது அதன் தேர்ச்சி மதிப்பெண் அளவு குறைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் முன்னோர்கள் இப்படி தான் நுழைந்து இருக்கிறார்கள்.

இவர்கள் தான் நம் மக்கள் நுழைவதை தடுக்க முயல்கிறார்கள். இவர்கள் நம் மக்கள் பணத்தில் படித்து அமெரிக்காவிற்கும், இங்கிலாந்துக்கும் சேவை செய்ய, நம் மக்கள் படிப்பதை தடுக்க முயல்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் சமூக நீதி இடபங்கிடு அமல் படுத்தப்பட வேண்டும். அதுதான் இதனை எல்லாம் மாற்றும்!

இந்திய குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற ஆறு பேர் கிரீமிலேயேர் என்று காரணம் சொல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து ?

டெல்லியில் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களின் இட பங்கீட்டை அதிகம் நிரப்புவது தமிழ்நாட்டு மாணவர்கள் தான் என்று வயிறு எரிகிறார்கள். சிவில் சர்விஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டவர்களின் இட பங்கீடு வந்த பிறகு, இதிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. இதனை தடுக்கத்தான் இந்த கிரீமிலேயேர் என்பதை கொண்டு வருகிறார்கள். மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு சிவில் சர்விஸ் மாதிரியான  தேர்வுகளில் யார் எழுத வருவார்கள்? ஒரு அளவு படித்த இரண்டாம் தலைமுறை படிக்க வருபவர்கள்தான். அதனை தடுத்தால் ஒட்டு மொத்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்துவிடலாம் என திட்டமிடுகிறார்கள். இந்த சதியை முறியடிக்க வேண்டும். பிற்படுத்தபட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்து தான் நிரப்பப்படுகிறது.

வட இந்தியப்  பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் எப்பொழுதும் உள் மோதல்களை உருவாக்கும் வேலையை இந்திய அரசு செய்யும். அதை பிற்படுத்தப்பட்டவர்கள்-தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் இந்து-முஸ்லீம் என்றம் அந்த பிரிவினையை ஊக்குவித்து அவர்கள் இட பங்கீடு போன்ற உரிமை சார்ந்த கோரிக்கைகளுக்கு ஒன்றிணைந்து செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. இதனால் இந்த கிரீமிலேயேர் என்னும் சதி திராவிட இயக்கங்களால் முதல் தலைமுறை கல்வி பெற்று பார்பனர்களோடு அதிகார மையங்களை நோக்கி முன்னேறும் தமிழகத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான சதி!

இந்த சமூக நீதி போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் கொடுக்கப்படும் தாக்குதலில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

கடந்த ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகளும் 69% சதவீத இட ஒதுக்கீட்டை கட்டி காத்தே வந்துள்ளனர்.  தங்கள் மேல் இருக்கும் வழக்குகளின் காரணமாக  மத்திய அரசிடம் மோதல் போக்கு வேண்டாம் என்று முடிவெடுத்ததாலோ என்னவோ இப்பொழுது தமிழகத்தின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள் இடப்பங்கீடு குறித்த தெளிவான வாதங்களை வைப்பது இல்லை. மற்ற வழக்குகள் போன்ற சிறந்த  வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமாக மருத்துவ கல்லூரிகள் இருக்கிறது. அதிகமாக  மருத்துவ மேற்படிப்பு இருக்கைகள் இருக்கிறது. அதிக டிப்பளமோ இருக்கைகள் இருக்கிறது. இதில் நமது இடப்பங்கீட்டை பலி கொடுத்து, பிற மாநில மேல் சாதியினருக்கு கொடுக்க நினைக்கிறார்கள். அசாம் போன்ற மருத்துவ கல்லூரிகள் குறைவாக இருக்கும் மாநில மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறார்கள். அங்குள்ள பழங்குடிகள் மலைவாழ் மக்கள் இங்கு படிக்க வருகிறார்கள். அவர்களில் உயர் நிலை பள்ளியை கூட தாண்ட முடியாத நிலையில்தான் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். இதன் மூலம் பல பகுதிகளில் உள்ள மேல் சாதியினருக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வேலைதான் இது. நாம் நம் மக்களின் வரிப்பணத்தில் கல்வி நிலையங்களை  வசதிகளை உருவாக்கி வைத்து இருப்பது இவர்கள் படித்து அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று மருத்துவ சேவை செய்யவா? இவர்களுக்காக நம் பிள்ளைகளின் உரிமையை விட்டுகொடுக்க வேண்டுமா?

இதில் தமிழக அரசு ஒரு முடிவெடுத்து ஆந்திரா காஷ்மீர் போல இதில் இருந்து வெளியெற வேண்டும். தொடர்ந்து உச்சநீதிமன்றம் இதில் தலையிடுவதை தடுக்க வேறு வழி இல்லை. எப்பொழுது எல்லாம் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்க திட்டமிடுகிறதோ, அப்பொழுது எல்லாம் உச்ச நீதிமன்றம் அதற்கு துணை செய்கிறது.

ஆந்திரா ,காஷ்மீர் மட்டும் மத்திய பிரிவுக்கு ஒதுக்கீடு செய்வதில் விலக்கு பெற்றுள்ளனர். அதனை போல தமிழகமும் இந்த அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும்.

சமூக நீதிக்கு எதிரான போராட்டத்தில் நாம் சமரசமற்று நிற்க வேண்டும். அதுதான் நம் உரிமைகளுக்கான போராட்டத்தில் முதல் படி.

நன்றி

பன்னீர் பெருமாள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top