பிசிசிஐ-யில் அமைச்சர்களுக்குத் தடை:லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

sc-or-bcci

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாவதற்கு தடை விதிக்க வேண்டும்

என்று முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றது.

பிசிசிஐ-யில் அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டியை உச்ச

நீதிமன்றம் அமைத்தது. அந்தக் கமிட்டி, உச்ச நீதிமன்றத்திடம் தனது பரிந்துரைகளை கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சமர்பித்திருந்தது. இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு உத்தரவிடும்படி,

உச்ச நீதிமன்றத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கீர்த்தி ஆஸாத், பிஷண் சிங் பேடி மற்றும் கிரிக்கெட் அமைப்பினர் அணுகினர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த விவகாரம் திங்கள்கிழமை மீண்டும்

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, லோதா கமிட்டியின் முக்கியப் பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகள் கூறியதாவது:

பிசிசிஐ அமைப்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் 70 வயதுக்கு அதிகமானோர் உறுப்பினர்களாக கூடாது. பிசிசிஐயில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வாக்குரிமை மட்டுமே அளிக்கப்பட

வேண்டும். பிசிசிஐ நிர்வாகத்தில் ஒருவர், ஒரேயொரு பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும்.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) பிரதிநிதி, பிசிசிஐயில் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு சிஏஜியின் பிரதிநிதி நியமிக்கப்பட்ட பிறகு, பிசிசிஐயில் இருக்கும் பிற நிர்வாகக்

குழுக்கள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும் ஆகிய பரிந்துரைகள் ஏற்கப்படுகின்றன.

அதேசமயம், கிரிக்கெட் சூதாட்டத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிப்பது குறித்தும், தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்குள் பிசிசிஐ-யை கொண்டு வருவது குறித்தும் நாடாளுமன்றத்தின்

முடிவுக்கே விட்டு விடுகிறோம். இதேபோல், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் திருத்தம் செய்ய வேண்டுமா? என்பது குறித்தும், விளம்பரதாரரின் பிரதிநிதி, பிசிசிஐயில்

இடம்பெற வேண்டுமா? என்பது குறித்தும் பிசிசிஐதான் முடிவெடுக்க வேண்டும்.

பிசிசிஐ அமைப்பில் நிர்வாக ரீதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் செய்யப்படவிருக்கும் சீர்திருத்தங்களை ஆர்.எம்.லோதா கமிட்டி கண்காணிக்க வேண்டும் என்றனர் நீதிபதிகள்.

முன்னதாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஓரு வாக்குரிமை மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை நிராகரித்த உச்ச நீதிமன்ற

நீதிபதிகள், 2-க்கும் மேற்பட்ட சங்கங்களைக் கொண்டுள்ள மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு சுழற்சி முறையில் மாற்றுச் சங்கங்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top