மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 14 ஏழை மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் ரூ.10½ லட்சம் நிதி உதவி

jayalalitha1

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, ஏற்கனவே 3 ஏழை மாணவிகளின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரியதர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் மேகலா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவி பிருந்தாதேவி ஆகியோரின் மருத்துவ படிப்புக்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, பிருந்தாதேவியை தவிர ஏனைய 2 மாணவிகளுக்கும் முதல் ஆண்டுக்கான கட்டணத்தொகையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த நிலையில், தற்போது மேலும் 14 பேரின் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான முழுச்செலவையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக, புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களான ஆர்.மனோஜ்குமார், ஆர்.செல்வபாண்டி, எஸ்.ஜெ.சூரியபிரகாஷ், டி.இலக்கிய எழிலரசி, எஸ்.நஸ்ரீன், சி.கோகிலா, பி.கார்த்திக், எம்.மகேஸ்குமார், எம்.சுர்ஜித், எஸ்.சரிதா, ஆர்.குட்ரோஸன் ஆகிய 11 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கும்; மாணவர் எஸ்.படையப்பா பல் மருத்துவம் படிப்பதற்கும்; அதேபோல், ஆர்.பழனிவேல், ஜி.சவும்யா ஆகிய 2 பேர் எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்பு படிப்பதற்கு இடங்கள் கிடைத்தும், தங்கள் குடும்பங்களின் வறுமைச் சூழ்நிலை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவித்து வருவதாக தெரிவித்து, நிதி உதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தனர்.

மாணவ, மாணவியரின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மாணவ, மாணவியரின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களது கல்வியும், வளர்ச்சியும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற உன்னத அக்கறையோடு, 14 மாணவ, மாணவியரின் கல்விக்கான முழு செலவையும் தாமே ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணமாக 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை “புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்”-ல் இருந்து செலுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top