நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 50.78 அடியாக உயர்ந்தது

mettur_dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 435 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 50.78 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் அளவும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பரப்பான பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள மணல் திட்டுகள் தற்போது தண்ணீரால் சூழப்பட்டு மூழ்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 13 ஆயிரத்து 435 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதாவது, நேற்று முன்தினம் 50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 50.78 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top