தொழில்முறை குத்துச்சண்டையில் அசத்தல்: ‘ஆசிய பசிபிக் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்’; விஜேந்தர் பேட்டி

தொழில்முறை குத்துச்சண்டையில் தான் வென்ற ஆசிய பசிபிக் பட்டத்தை குத்துச்சண்டை சகாப்தம் முகமது அலிக்கு சமர்ப்பிப்பதாக இந்திய வீரர் விஜேந்தர் கூறியுள்ளார்.

Emotional-Vijender-Singh-Dedicates-Title-Win-to-Muhammad-Ali_SECVPF

தொழில்முறை குத்துச்சண்டையில் ஆசிய பசிபிக் பட்டத்துக்கான (சூப்பர் மிடில் வெயிட் பிரிவு) பந்தயத்தில் இந்திய வீரர் விஜேந்தர்சிங்கும், ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பும் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மோதினர். இதில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த விஜேந்தர்சிங், தனக்கே உரிய பாணியில் எதிராளிக்கு அவ்வப்போது குத்துகளை விட்டு தடுமாற வைத்தார். என்றாலும் அனுபவம் வாய்ந்த கெர்ரி ஹோப், விஜேந்தரின் சவாலுக்கு ஈடுகொடுத்து சமாளித்தார். தனது முந்தைய ஆட்டங்களில் எல்லாம் விஜேந்தர், எதிராளிகளை எளிதில் ‘நாக்-அவுட்’ செய்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் கெர்ரி ஹோப் 10 ரவுண்டும் முழுமையாக தாக்குப்பிடித்து விட்டார்.

முடிவில் நடுவர்களின் தீர்ப்புபடி விஜேந்தர்சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கண்டு பட்டத்தை கைப்பற்றினார். தொழில்முறை குத்துச்சண்டை வீரராக உருவெடுத்த பிறகு தோல்வியே சந்திக்காத விஜேந்தர்சிங் பதிவு செய்த 7-வது வெற்றி இதுவாகும்.
முகமது அலிக்கு சமர்ப்பணம்

சொந்த மண்ணில் முதல்முறையாக தொழில்முறை குத்துச்சண்டையில் கால் பதித்த விஜேந்தர்சிங் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மகுடத்தை சூடிய போது ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது. பின்னர் 30 வயதான விஜேந்தர்சிங் அளித்த பேட்டி வருமாறு:-

இந்த ஆட்டம் 10 ரவுண்ட் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை நான் விளையாடிய தொழில்முறை குத்துச்சண்டை போட்டியிலேயே வலுமிக்க எதிராளியாக கெர்ரி ஹோப் திகழ்ந்தார். அவரை ‘நாக்-அவுட்’ செய்ய முயற்சித்தேன். எனது முயற்சி ஈடேறவில்லை. அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை. எப்படியும் வெற்றி, வெற்றி தானே. இந்த வெற்றி எனக்கு மட்டும் சொந்தமல்ல, என்னுடைய நாட்டின் வெற்றி. போட்டியை காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பட்டத்தை சமீபத்தில் மறைந்த குத்தச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன். முகமது அலியின் குத்துச்சண்டை வீடியோ காட்சிகளை பார்த்து, அதில் இருந்து நிறைய கற்று கொண்டவர்களில் நானும் ஒருவன்.

‘நம்பர் ஒன்’ இலக்கு

இந்த வெற்றியின் மூலம் தொழில்முறை குத்துச்சண்டை தரவரிசையில் இப்போது நான் 15-வது இடத்தை பிடித்து இருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும், தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. இது வெறும் தொடக்கம் தான். இனி வரும் பந்தயங்கள் கடுமையானவை. ஆனால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனது பயிற்சியாளர்கள் மற்றும் எனது அணியினருடன் இணைந்து இன்னும் தீவிரமாக பயிற்சி மேற்கொள்வேன்.
ஒலிம்பிக் பதக்கத்துடன் இதை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. ஒலிம்பிக் பதக்கம் மிகப்பெரியது. அது தான் எனக்கு தனி அடையாளத்தை கொடுத்து பிரபலப்படுத்தியது. ஒலிம்பிக் பதக்கம் எனக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்த பட்டம் கூட அப்படி தான். என்றாலும் இது வித்தியாமானது.
இந்தியாவில், தொழில்முறை குத்துச்சண்டையின் எதிர்காலம் குறித்து கேட்கிறீர்கள். எனது பந்தயத்தை நிறைய பேர் உற்சாகமாக கண்டுகளித்தனர். அது தான் முக்கியம். அவர்களிடம் இந்த குத்துச்சண்டை பிடித்து இருக்கிறதா? இல்லையா? என்று கேட்க வேண்டும். என்னை பொறுத்தவரை பட்டத்தை வென்று எனது பணியை செய்து முடித்து விட்டேன். இனி மக்கள் தான் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு விஜேந்தர்சிங் கூறினார்.

ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

சாதனை படைத்த விஜேந்தருக்கு பாராட்டுகள் குவிகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜேந்தருக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்து விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ‘கடுமையாக போட்டியிட்ட விஜேந்தருக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்கு அவர் தகுதியானர். மீண்டும் ஒரு முறை அவரது அபரிமிதமான திறமை, பலம், மனஉறுதி இந்த போட்டியின் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, ‘நீண்ட நாட்களுக்கு பிறகு குத்துச்சண்டையில் முழு ஆட்டத்தை பார்த்தேன். தேசத்திற்கு பெருமை சேர்த்த விஜேந்தருக்கு பாராட்டுகள். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, செய்த தியாகங்களுக்கு கிடைத்த பரிசு இது’ என்றார்.

அடுத்து யாருடன்?

விஜேந்தர்சிங் அடுத்து, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் அமிர் கானுடன் மோத வாய்ப்பு உள்ளது. அவரும் விஜேந்தரை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி விஜேந்தரிடம் கேட்ட போது, ‘நானும், அமிர் கானும் வெவ்வேறு உடல் எடைப்பிரிவை சேர்ந்தவர்கள். ஒன்று அவர் தனது எடையை அதிகரிக்க வேண்டும் அல்லது நான் எனது எடையை குறைக்க வேண்டும். அது பற்றி நானும் யோசித்து வருகிறேன். என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். அடுத்த பெரிய பந்தயம் இந்தியாவில் நடக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். தரவரிசையில் முன்னேற்றம் காண விஜேந்தர்சிங் அடுத்த இரு மாதங்கள் இந்த பட்டத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியமாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top