பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை கடும் நடவடிக்கை தேவை வைகோ

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கல்விக் கடன் பெற்ற பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை விவகாரத்தில் மத்திய -மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

13692533_825213370911427_5920124720169874399_n

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் லெனின் பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, கடனை வசூலிக்க அடியாட்களை பணியாளர்களாக சேர்த்து, மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் மிரட்டி வருகின்றனர்.

படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன  நிலையில், லெனின் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தனியார் முகவர் மூலம் நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. தனியார் முகவர்கள் பேட்டை ரவுடிகளைப் போல நெருக்கடி தந்ததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரசுத்துறை வங்கிகளின் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய -மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் லெனின் போன்ற மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகிவிடும்.

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ள பெரு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லாத வங்கிகள், எளிய விவசாயிகளையும், கல்விக்கடன் பெற்ற மாணவர்களையும் துன்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் முழுவதையும் தமிழக அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்குக் காரணமான வங்கி மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top