ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை வெல்வாரா விஜேந்தர்சிங் : ஆஸ்திரேலிய வீரருடன் இன்று மோதல்

dc-Cover-el40g45ek4kukbvtqt15aeelr7-20160607013352.Medi

உலக குத்துச்சண்டை அமைப்பின் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் தொழில்முறை குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்துக்கான போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது.

இதில் 30 வயதான இந்திய வீரர் விஜேந்தர்சிங், முன்னாள் சாம்பியனும், உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 34 வயதான ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப்புடன் மல்லுக்கட்டுகிறார். இந்த பந்தயம் 10 சுற்றுகளை கொண்டதாகும். இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.800 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான விஜேந்தர்சிங் தொழில்முறை வீரராக அவதாரம் எடுத்த பிறகு தனது 6 பந்தயங்களிலும் எதிராளிகளை நாக்-அவுட் செய்து தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறார். சொந்த மண்ணில் விஜேந்தர்சிங் மோதும் முதல் போட்டி இதுவாகும்.

தொழில்முறை போட்டியில் 12 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவரான கெர்ரி ஹோப் இதுவரை 30 பந்தயங்களில் மோதி 23-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளார். சிறந்த வீரர்கள் இருவரும் மோதும் இந்த போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி குறித்து விஜேந்தர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘கெர்ரி அனுபவம் வாய்ந்த வீரர். அவருடைய பந்தய வீடியோக்களை பார்த்து அதற்கு தகுந்தபடி நான் தயாராகி இருக்கிறேன். அவர் தர வரிசையில் 3-வது நிலை வீரர் என்றால், நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவன். அது சிறிய விஷயம் அல்ல. இது விறுவிறுப்பு நிறைந்த போட்டியாக இருக்கும். எங்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதை இந்த போட்டி முடிவு செய்யும். மற்றொரு ‘நாக்-அவுட்’ வெற்றியை பெற முயற்சிப்பேன். கெர்ரியை வீழ்த்த களத்தில் எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். முதல்முறையாக சொந்த ரசிகர்கள் முன்னிலையில் மோத இருப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. இது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணமாகும். இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை’ என்றார்.

இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top