துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி: கடும் விலை கொடுக்க நேரிடும் என அந்நாட்டுபிரதமர் எச்சரிக்கை

துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்த நிலையில் துருக்கியில்  ஆட்சி அதிகாரத்தை கைபற்றியதாகவும், ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் ராணுவம் அறிவித்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அங்காரா நகரில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இராணுவத்தினர் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் முக்கிய பாலங்களான போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அங்காரா நகரில் இராணுவத்திற்கும் அரசு தரப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. துருக்கி பாராளுமன்றம் மீது இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தினர்.இஸ்தான்புல் நகரில் உள்ள தஸ்கின் சதுக்கம் அருகே போலீசார் மற்றும் இராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.  இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர். அங்காராவில் உள்ள செயலாக்க துறையினர் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்துள்ளனர். ராணுவம் மற்றும் போலீஸ் இடையே நடைபெற்ற மோதலில் 42 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தாக ராணுவம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே ஆட்சியை கைப்பற்ற நினைத்த ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் பினாலி எல்ட்ரீம் தெரிவித்துள்ளார். ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சிக்கு சதி செய்தவர்கள் பயன்படுத்தும் விமானத்தை சுட்டு வீழ்த்துமாறு பிரதமர் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா துருக்கியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ” ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை” ஆதரிக்குமாறு கோரியுள்ளார்.துருக்கியில் ஜனநாயக அமைப்புகளுக்கு “முழுமையான மரியாதை” தரப்பவேண்டுமென்று நேட்டோ கோரியுள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top