ரியோ ஒலிம்பிக்கில் திருச்சி இளைஞர்!

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடாது. துன்பங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த துன்பங்களைத் தாண்டி வருபவர்களே உயர்நிலையை அடைகின்றனர். என்னை கஷ்டங்கள்தான் வளர்த்தெடுத்தன; வளரத் தூண்டி வருகின்றன.

raj1

இதை யாரோ ஒரு ஞானி கூறவில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்திலிருந்து ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் (25) உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வழுதியூர் சந்தியாகப்பர் தெருவைச் சேர்ந்த செüந்தர்ராஜன் (கார் ஓட்டுநர்) – லில்லிசந்திரா (இல்லத்தரசி) தம்பதிக்கு ஆரோக்ய ராஜீவ் (25), டேனியல் ரஞ்சித், எலிசபெத் ராணி என மூன்று குழந்தைகள். தந்தை ஒருவரின் சம்பாத்தியமே நிதி ஆதாரம் என்பதால், குடும்பமே வறுமையில் உழன்றது. மூன்று பிள்ளைகளுக்கும் உணவளித்து படிக்க வைக்கவே கஷ்டமான சூழ்நிலை.

இதற்கிடையே தொடக்கக் கல்வியை வழுதியூர் ராஜா மானியப் பள்ளியிலும், பிளஸ் 2 வரை லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்து வளர்ந்த ஆரோக்ய ராஜீவ், 9 வயதில் குக்கிராமத்தில் பயிற்சியைத் தொடங்கி பல்வேறு வெற்றி, தோல்விகளை சந்தித்து தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

“குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்த ராஜீவ், தன்னையும் உயர்த்தி குடும்பத்தையும் உயர்த்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் அவர் கண்டிப்பாக பதக்கம் பெறுவார்’ என்கிறார் ஆரோக்ய ராஜீவின் தந்தை செüந்தர்ராஜன்.

“பள்ளி விளையாட்டுகளில் அவரது அதீத ஆர்வத்தையும், இடைவிடாத முயற்சியையும் கண்டு வியந்தேன். ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் அவரது உடல்வாகு இருந்ததைக் கண்டு, பயிற்சியளித்தேன். போட்டியில் பங்கேற்க ஷூ வாங்கக் கூட பணமில்லாமல்தான் அப்போதைய அவரது குடும்ப சூழ்நிலை இருந்தது. பலர் அவருக்கு உதவி செய்தாலும், தற்போது ஒலிம்பிக் செல்லும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு ராஜீவின் கடும் உழைப்பே காரணம்’ என்றார் பள்ளி பருவத்தில் ஆரோக்ய ராஜீவுக்கு பயிற்சியளித்த பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன்.

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆரோக்ய ராஜீவ் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: எனது தந்தை 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் தங்கம் வென்றவர். இதனை அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டே இருப்பார். தந்தையைப் பார்த்து நானும் சிறுவயது முதலே தடகளப் பயிற்சி மேற்கொண்டேன். இதைப் பார்த்த எனது பள்ளி விளையாட்டு ஆசிரியர் ராமச்சந்திரன், என்னை ஊக்கப்படுத்தினார். இதையடுத்து 10,

12-ஆம் வகுப்புகள் படிக்கும் போது நீளம் தாண்டுதலில் மண்டல, மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்க பதக்கங்கள் பெற்றேன். மாநில அளவிலும் பங்கேற்றேன்.

இதையடுத்து விளையாட்டு ஒதுக்கீட்டில் திருச்சி புனித வளனார் கல்லூரியில் பிஏ (வரலாறு) சேர்ந்தேன். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கமும், மும்முறைத் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றேன்.

இதன்மூலம் எனக்கு ராணுவத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு பணி கிடைத்தது. அங்கு எனக்கு ராம்குமார் என்பவர் பயிற்சி அளித்தார். ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி பெற்றேன். இதைத் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் 400 மீ. தனிநபர், தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றேன். ஆனாலும், நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது லட்சியமாக இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது.

4ஷ்400 மீ. தொடர் ஓட்டத்தில் திருப்பூரைச் சேர்ந்த தருண், கேரள மாநிலத்தைச் சேர்ந்த குன்ஹு முகம்மது, முகமது அனஸ் ஆகியோருடன் பங்கேற்கிறேன். அதில் கடைசி 400 மீ. தூரத்தைக் கடக்கும் வீரராக களமிறங்க உள்ளேன்.

என்னுடைய வெற்றிகள் அனைத்திற்கும் கஷ்டங்களே காரணம். கஷ்டங்கள்தான் வளர்த்தெடுத்தன; நான் வளரவும் தூண்டி வருகின்றன. ஒலிம்பிக்கில் 4ஷ்400 மீ. தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்வதே தற்போதைய குறிக்கோள் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top