ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து 2-ஆவது இடத்தில் இந்தியா

ICC_Logo-ed_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவைத் தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால், இந்தியாவைப் பின்னுக்குத்தள்ளி 2-ஆவது இடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது.

டெஸ்ட் தொடரை 3-0, 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றால் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனினும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு மிகவும் சிரமமான விஷயம்தான். இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 2-1 அல்லது 1-0 என்ற கணக்கில் வென்றால் டெஸ்ட் தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேற முடியும். 2-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் இந்தியாவுடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் இங்கிலாந்து எளிதாக 2-ஆவது இடத்துக்கு முன்னேறும்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. ரஹானே 11-ஆவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 14-ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் 2-ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 3-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

அஸ்வின் முதலிடம்: ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 2-ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 3-ஆவது இடத்திலும் உள்ளனர். எனினும், பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் முறையே முதல் மற்றும் 3ஆவது இடத்தில் உள்ளனர்.

இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top