ரியோ ஒலிம்பிக்:இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ்

pr-sreejesh-m

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனாக, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அணியின் கேப்டனாக நீண்டகாலம் பொறுப்பு வகித்த சர்தார் சிங் விலக்கிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.வி.சுனில், ஒலிம்பிக் போட்டிக்கான அணியிலும் துணை கேப்டனாக தொடருகிறார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து சர்தார் சிங் விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மன் கூறியதாவது:

சர்தார் சிங்கிற்கு களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பொறுப்புகளை குறைக்கும் நடவடிக்கையாகவே, கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த முடிவை அவரும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அவரை பாதித்துள்ளன. சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் கேப்டனை மாற்றி மேற்கொண்ட முயற்சிக்கு தகுந்த பலன் கிடைத்துள்ளதால் அதைத் தொடருகிறோம்.

ரியோ ஒலிம்பிக்கிற்கான அணியில் இடம்பெற்றுள்ள 16 வீரர்களில் 7 பேர் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். எஞ்சிய 9 பேர் புதிய வீரர்கள் என்று ஓல்ட்மன் கூறினார்.

இதுகுறித்து சர்தார் சிங் கூறுகையில், “ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்வதே எங்கள் முதல் குறிக்கோள். ஸ்ரீஜேஷுக்கு எனது வாழ்த்துக்கள். இது ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய தருணம்.

பாலியல் புகார் உள்ளிட்ட பிரச்னைகள் மூலம் எனது கவனத்தை திசை திருப்ப முயல்கின்றனர்’ என்றார்.

கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறுகையில், “எனது செயல்பாட்டில் அதிகம் கவனம் செலுத்துவேன். ஏனெனில், ஒரு கேப்டனாக இருக்கும் கோல் கீப்பர் கோல்களை தவறவிடுவது வெட்கத்திற்குறியது.

அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவளிப்பேன். சர்தாரைப் பொறுத்த வரையில் அவர் தனது பிரச்னைகளை களத்திற்கு எடுத்துவர மாட்டார்’ என்றார்.

அணியின் விபரம்

ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர் மற்றும் கேப்டன்), ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர்பால் சிங், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், மன்பிரீத் சிங், சர்தார் சிங், வி.ஆர்.ரகுநாத், எஸ்.கே.உத்தப்பா, தனிஷ் முஜ்தபா, தேவிந்தர் வால்மிகி, எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப் சிங், சிங்லென்சனா சிங், ரமன்தீப் சிங், நிகின் திம்மையா.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top