மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ படிப்புக்கான பொதுநுழைவு தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தன்னை விலக்கி கொண்டார்.

Medical-Common-Entrance-exam-exemption_SECVPF

மருத்துவ பொதுநுழைவு தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 24–ந் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவு தேர்வு நடத்தப்படாது.

நாடு முழுவதும் பொதுநுழைவு தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்து மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் சங்கல்ப் அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விவேக் தன்கா, சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மருத்துவ படிப்புக்காக பொதுநுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு மருத்துவ நுழைவு தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பித்தது சட்டத்துக்கு புறம்பானது. 24–ந் தேதி 2–வது கட்ட தேர்வுகள் நடைபெற உள்ளதால் அதற்குள் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதி அனில் ஆர்.தவே, இந்த அமர்வின் மற்றொரு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்கில் ஆஜராகி இருப்பதால் இந்த மனுவின் மீதான விசாரணையில் இருந்து தன்னை விலக்கி கொண்டார். இந்த மனுக்களை என்னுடன் வேறொரு நீதிபதியை கொண்ட அமர்வு விசாரிக்கும். கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் இதற்கான தேதியையும், உரிய அமர்வையும் விரைவில் அறிவிக்கும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

வரும் 15–ந் தேதி நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top