இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.

GBN

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து, ராஜபக்சே அதிபராக இருந்தபோது அவரும், அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு என்ற ஒரு புதிய அமைப்பை சிறிசேனா அரசு ஏற்படுத்தியது. ஒரு டெலிவிஷன் சேனல் தொடர்பான வர்த்தக மோசடி வழக்கில் ராஜபக்சேயின் இளையமகன் யாஷிதாவை நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு ஏற்கனவே கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தனது மீதும், தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் அரசியல் நோக்கத்துடன் சிறிசேனா அரசு வழக்கு தொடர்ந்து வருவதாகவும், தனது செல்வாக்கை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாகவும் ராஜபக்சே குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில், நிதி மோசடி தொடர்பாக ராஜபக்சேயின் மூத்த மகன் நிமல் ராஜபக்சேயை (வயது 30) நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு நேற்று கைது செய்தது. இவர் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியின் எம்.பியாக (ஹம்பன்தோடா மாவட்டம்) இருந்து வருகிறார்.

ராஜபக்சே ஆட்சியின் போது கடந்த 2013–ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கிரிஷ் குரூப் என்ற நிறுவனத்துக்கு ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கொழும்பு நகரின் முக்கிய பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 650 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,225 கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் சிலருக்கு ரூ.45 கோடி கமிஷனாக வழங்கப்பட்டதாகவும் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நிறுவனம் ரக்பி போட்டியை நடத்துவதற்காக வழங்கிய பணத்தை நிமல் ராஜபக்சே தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நிறுவனத்துக்கு இலங்கை நகர்ப்புற அபிவிருத்தி குழுமம் அபராதம் விதித்தது. அத்துடன் அந்த நிறுவனம் மேற்கொள்ள இருந்த திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்துக்கு எந்த பாக்கியும் வைக்கவில்லை என்றும், ஒப்பந்த நடைமுறைகளை மீறவில்லை என்றும் கூறி அந்த நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தது.

இதைத்தொடர்ந்து நிமல் ராஜபக்சேயிடம் நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பின்னர், நிதி மோசடி வழக்கில் அவரை இப்போது கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை இலங்கை போலீசார் தெரிவித்து உள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top