குத்தகைக் காலம் முடிந்தாலும் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

குத்தகைக் காலம் முடிந்தாலும், நிலத்தை விட்டு விவசாயியை வெளியேற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

sc

இதுதொடர்பான வழக்கு ஒன்றில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குத்தகைக் காலம் முடிந்தும் விவசாய நிலத்தை விட்டு வெளியேறாமல் இருந்த விவசாயியை அந்த நிலத்தை விட்டு வெளியேற்றும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் முன்பு அளித்திருந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 116-ஆவது பிரிவில், நிலத்துக்கான குத்தகைக் காலம் முடிந்தாலும் சரி, அந்தக் குத்தகை பாதியிலேயே ரத்து செய்யப்பட்டாலும் சரி, குத்தகைக்கு பெற்ற விவசாயிக்கே அந்த நிலம் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 1953-ஆம் ஆண்டு பஞ்சாப் நிலக் குத்தகை பாதுகாப்பு சட்டத்திலுள்ள பிரிவுகளில், நிலத்தில் குத்தகை செலுத்திக் கொண்டு இருக்கும் விவசாயியை வெளியேற்றுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1953-ஆம் ஆண்டு பஞ்சாப் நிலக் குத்தகை பாதுகாப்புச் சட்டத்தில், குத்தகை காலம் முடிந்ததும் நிலத்தை விட்டு விவசாயியை வெளியேற்றுவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1887-ஆம் ஆண்டு பஞ்சாப் நிலக் குத்தகை சட்டத்திலும், குத்தகைக் காலம் முடிவடைந்த குத்தகைதாரர் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆகையால், 1953-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் விவசாயியை நிலத்தில் இருந்து வெளியேற்றுவதில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம், இத்தகையை சட்ட ரீதியிலான பாதுகாப்பானது, சட்டப்படி குத்தகை பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top