விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

Wimbledon2nd-time-Murray-champion_SECVPFவிம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இரு வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும், 7–ம் நிலை வீரர் மிலோஸ் ராவ்னிக்கும் (கனடா) மோதினர். அரைஇறுதியில் 7 முறை சாம்பியன் பெடரருக்கு அதிர்ச்சி அளித்த ராவ்னிக் மிகுந்த நம்பிக்கையுடன் களம் புகுந்தார்.

ஆனால் உள்ளூர் நாயகன் முர்ரேவின் அதிரடியான ஷாட்டுகளுக்கும், சில சாதுர்யமான சர்வீஸ்களுக்கும் ராவ்னிக்கால் முழுமையாக ஈடுகொடுக்க முடியவில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ராவ்னிக் கடும் சவால் அளித்தார் என்று சொல்லலாம். முதல் செட்டை ஓரளவு எளிதில் கைப்பற்றிய முர்ரே, 2–வது செட்டில் எதிராளியின் ஒரு சர்வீசை கூட முறியடிக்கவில்லை. இதனால் டைபிரேக்கர் வரை போராடியே 2–வது செட்டை முர்ரே வசப்படுத்த முடிந்தது. மூன்றாவது செட்டிலும் இருவரும் தங்களது சர்வீஸ்களை மட்டும் புள்ளியாக மாற்றியதால் சமநிலை (6–6) நீடித்தது. இதையடுத்து இந்த செட்டும் டைபிரேக்கருக்குள் நுழைந்தது. டைபிரேக்கரில் அட்டகாசப்படுத்திய முர்ரே, ராவ்னிக்கின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

2 மணி 48 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 6–4, 7–6 (7–3), 7–6 (7–2) என்ற நேர் செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை சொந்தமாக்கினார். இதன் மூலம் ராவ்னிக்கின் கனவு சிதைந்த போதிலும், கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் கனடா வீரர் என்ற பெருமையுடன் அவர் திருப்திபட வேண்டியதாயிற்று.

29 வயதான முர்ரேவுக்கு இது 2–வது விம்பிள்டன் மகுடமாகும். ஏற்கனவே 2013–ம் ஆண்டில் விம்பிள்டனை முதல்முறையாக கையில் ஏந்தினார். மொத்தத்தில் அவருக்கு இது 3–வது கிராண்ட்ஸ்லாம் ஆகும். 2012–ம் ஆண்டில் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றி இருக்கிறார்.

வாகை சூடிய ஆன்டி முர்ரேவுக்கு ரூ.18½ கோடியும், 2–வது இடத்தை பிடித்த மிலோஸ் ராவ்னிக்குக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

பெண்கள் ஒற்றையரில் பட்டத்தை வென்று சாதனை படைத்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இரட்டையர் பிரிவிலும் ஆதிக்கத்தை நிலை நாட்டினார். அவரும், அவரது அக்கா வீனஸ் வில்லியம்சும் இணைந்து இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணையை எதிர்கொண்டனர். விறுவிறுப்பான இந்த மோதலில் வில்லியம்ஸ் சகோதரிகள் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றனர். இவர்கள் கூட்டாக இணைந்து பெற்ற 14–வது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.

விம்பிள்டன் ஒற்றையர், இரட்டையர் பட்டத்தை செரீனா ஒருசேர வசப்படுத்துவது இது 4–வது நிகழ்வாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top