நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

mettur_dam

பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தொடங்கியதில் இருந்து சீராக மழை பெய்யவில்லை. அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், பின்பு நின்று விடுவதுமாக இருந்தது.

இதனால் முதல்போக சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் கவலை அடைந்தனர். எனினும் அவ்வப்போது பெய்து வந்த மழையை கொண்டு நாற்றாங்கால் பணிகளை தொடங்கினர்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. இது குறித்து தமிழக அரசின் உத்தரவை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நேற்று முதல் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு 1561 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 28.54 அடியாக உள்ளது. அணைக்கு 25 கன அடி நீர் வருகிறது. மதுரை குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.60 அடி. வரத்தும் இல்லை திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 63.96 அடி. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு 21, தேக்கடி 11.2, கூடலூர் 4.6, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 2.4, வீரபாண்டி 2, வைகை அணை 1, சோத்துப்பாறை 1, கொடைக்கானல் 1 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

இதேபோல் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்தால் முதல்போக பாசனத்திற்கு தட்டுப்பாடு இருக்காது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top