ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

201607100748239481_Portugal-vs-France-Predict-who-wins-the-Euro-2016-final-in_SECVPF (1)

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- போர்ச்சுகல் அணிகள் இன்று நள்ளிரவு யுத்தத்தில் இறங்குகின்றன.

15-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) பிரான்சில் ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் சாம்பியன் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் பிரான்சும், போர்ச்சுகலும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோல்வியே சந்திக்காத பிரான்ஸ் அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. உலக சாம்பியன் ஜெர்மனியை அரைஇறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் போட்டுத்தாக்கியதே அதற்கு உதாரணம். பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாகவும், அதே சமயம் சாதுர்யமாகவும் விளையாடி வருகிறார்கள். 6 கோல்கள் அடித்து தொடர்நாயகன் மற்றும் தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் உள்ள ஆன்டோனி கிரிஸ்மான் மற்றும் டிமிட்ரி பயேத், ஆலிவியர் ஜிராட், பால் போக்பா, கோல் கீப்பரும், கேப்டனுமான ஹூகோ லோரிஸ் ஆகியோர் பிரான்ஸ் அணியின் தூண்களாக விளங்குகிறார்கள். நெருக்கடியை திறம்பட கையாள்வதோடு இவர்களின் பிடியும் இறுகினால் நிச்சயம் போர்ச்சுகலின் கதி கந்தல் தான். ஏற்கனவே 1984, 2000-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையை வென்றிருக்கும் பிரான்ஸ், இந்த முறையும் வாகை சூடினால் அதிக முறை இந்த கோப்பையை ருசித்த ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகளின் சாதனையை சமன் செய்யும்.

லீக் சுற்றில் மந்தமாக ஆடிய போர்ச்சுகல் போக போக முன்னேற்றம் கண்டு சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்திருக்கிறது. அந்த அணி முழுக்க முழுக்க கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ(3 கோல்), நானி ஆகியோரைத் தான் மலைபோல் நம்பி இருக்கிறது. போர்ச்சுகல் அணி இதுவரை எந்த சர்வதேச பட்டத்தையும் வென்றதில்லை. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை இறுதி ஆட்டத்தில் கிரீசிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்தது. அந்த இறுதி ஆட்டத்தில் ஆடிய போது ரொனால்டோவுக்கு வயது 18. தோல்வியை தாங்க முடியாமல் சிறுபிள்ளை போல் தேம்பி தேம்பி அழுதார். ஆனால் இப்போது நன்கு பக்குவப்பட்டு புகழ்பெற்ற வீரராக விளங்குகிறார். தேச அணிக்காக கோப்பையை வெல்வதை கனவாக கொண்டுள்ள அவர், முழுமூச்சுடன் களத்தில் வரிந்து கட்டி நிற்பார். அவருக்கு மட்டும் நேர்த்தியான ஒத்துழைப்பு கிடைத்தால், பிரான்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விடுவார். காயத்தால் அவதிப்படும் போர்ச்சுகல் வீரர் பெப்பே இந்த ஆட்டத்திலும் களம் காணுவது சந்தேகம் தான்.

வரலாறு எல்லாம் பிரான்சுக்கே சாதகமாக உள்ளன. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 10 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. போர்ச்சுகல் கடைசியாக பிரான்சை 1975-ம் ஆண்டு வீழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ பரபரப்பும், திரிலிங்கும் நிறைந்த இறுதிப்போட்டியாக இது அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இறுதி ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top