திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

ஜெனிவாவில் நடைபெற்ற 32 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஜெனிவாவில் இருந்து அளித்த சிறப்பு பேட்டி

sivajimmmmm

ஐ.நா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவாலும் ஏனைய நாடுகளாலும் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டு இருந்தோம். ஆனால், அது இல்லாமல் ஒரு அலுவலக அறிக்கை போல OHCR மனித உரிமை ஆணையரால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இலங்கை அரசுக்கு ஒரு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. 2015 மார்ச் மாதம் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின் ஒன்பது மாதங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜுன் வரை ஒன்பது மாதங்கள் கொடுக்கப்பட்டு இருந்த போது தான் ஐ.நா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை வந்துள்ளது. இறுதி அறிக்கை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் 34ஆவது கூட்ட தொடரில் வெளியிடப்படும். 2017 ஆம் ஆண்டு என்கிற போது ஏறக்குறைய இரண்டு வருடங்களும் இரண்டு மாதமும் வழங்கப்பட்டுவிடும்.  ஆனால், அவர்கள் மனித உரிமை ஆணையரின் அறிக்கைக்கு சொல்லும் பதிலில் மக்களை குடியமர்த்துவதற்கு, 2018 ஆம் ஆண்டு வரை காலக்கெடு கேட்கிறார்கள்.

இது கொடுக்கப்படுமானால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து, மேலும்  இரண்டு ஆண்டுகள் கொடுக்கப்படும்போது இலங்கையில் சொல்வது போல இரண்டு ஆண்டுகள் ஐ.நா நடவடிக்கை எடுப்பதை தடுத்து ஏமாற்றிவிட்டால், தேசிய அரசின் நிகழ்ச்சி நிரலே  முடிவடைந்துவிடும். அதுதான்  நடக்கப்போகிறது, மேலும், ஐ.நா மனித உரிமை ஆணையரின் அறிக்கையில், இலங்கையில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடுவதை போல தமிழிலும் பாடுவதை வரவேற்றுள்ளார்.

வடக்கு மாகாண முதல்வர் புத்தமடத்திற்கு சென்று வழிபடுவதை நல்லிணக்கம் என்று கூறியுள்ளார். ஆகவே, இவ்வாறான ஒரு ஏமாற்று நாடகமாகதான் சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ந்து மார்ச் மாதமும் அவகாசம் கொடுக்கப்படாமல் இருக்க போவதில்லை. ஆகவே, எங்களுடைய இருப்பு இல்லாமல் செய்து பின்  அரசியல் தீர்வு இல்லாமல், தமிழ் மக்களுக்கு நீதியும் இல்லாமல், ஒரு தேசிய நல்லிணக்கமும் ஒரு நிரந்தர சமாதானமும் ஏற்பட போவதும்  இல்லை. வழக்கமான ஏமாற்று வார்த்தைகளை கொண்ட அறிக்கையாக இது இருப்பது  . மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்த தீர்மானம்  நிறைவேற்றப்படும் முன் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சிங்களத்தில் இருந்து வந்த மனித உரிமை ஆர்வளர் உட்பட பலரும் சர்வதேச விசாரணை கோரியிருந்தனர். இப்பொழுது அவர்கள் அப்படியான கோரிக்கைகளை வைப்பது இல்லை. எனில், இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டி தான் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதா என்று சந்தேகம் ஏற்படுகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக விசாரிக்க வேண்டும் என இருந்தது. நாங்கள் கோரியது போல விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்பது இல்லாவிட்டாலும், சர்வதேச விசாரணை என்பது இருந்தது. ஆனால், பூலோக நலன் சார்ந்த ஆட்சி மாற்றத்தை அவர்கள் மாற்றிய பின்னர், அவர்கள் தங்கள் கோரிக்கையில் இருந்து பின் வாங்கி விட்டர்களா, இறங்கி விட்டர்களா என்ற சந்தேகம் எழுகிறது.

இது பூலோக நலன் சார்ந்த அரசியல் ஒட்டித்தான் போகின்றன என்பது உறுதியாகிறது. எது எப்படி இருந்தாலும் பூலோக நலன் சார்ந்த விடயங்களில் இருந்து இலங்கை அரசாங்கம்  இணைந்து அமெரிக்காவுடன் சேர்ந்து ஏற்றுக்கொண்ட, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் என்று அவர்கள் ஏற்று கொண்டதனையே இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் மறுத்து இருக்கிறார்கள்.

இதற்கு பின்னரும் இந்த ஐ.நா மனித உரிமை ஆணையம் என்ன செய்யப்போகிறது? மீண்டும் இலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களுக்கு பின்னர் தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படும் என்பது போன்ற தொனியிலே மனித உரிமை ஆணையரின் அறிக்கை சென்றது. இது மிக  நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு, பின் எதுவும் இல்லாமல் போகுமோ என்று ஐயம் எழுந்து இருக்கிறது. ஆனால், நாங்கள் இலங்கை தீவிலே இதுவரை நிரந்தர சமாதானம் ஏற்படவும் இல்லை; தேசிய நல்லிணக்கமும் இல்லை; அரசியல் தீர்வு ஏற்று கொள்ளத்தக்க தீர்வாகவும் இல்லை என்பதை சொல்லி, சர்வதேசத்திற்கு வேறு வழியில்லை என்பதனை உருவாக்குவதுதான் ஈழ தமிழினத்தின் பணியாக இருக்கும்.

18543
2017 மார்ச் மாதத்திலேயே இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தமிழ் மக்கள், குறிப்பாக ஈழத்தை ஆதரிக்கக்கூடிய ஒட்டு மொத்த அரசியல் குழுக்கள், சர்வதேச செயல்பாட்டாளர்கள் எப்படியான ஒரு செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இன்னும் ஒன்பது மாதங்கள் என்றால் 270 நாட்கள் இருக்கிறது. மூன்று தரப்பு மக்கள், ஒன்று தாயகத்தில் இருக்கும் மக்கள், இரண்டு தொப்புள்கொடி உறவான தாய் தமிழக மக்கள், இன்னொன்று உலகெங்கிலும் புலம் பெயர்ந்து இருக்கும் மக்கள் இந்த மூன்று தரப்பும் போராட வேண்டும். தாயகத்திலேயே இருக்கும் மக்கள் இந்த ஏமாற்று வித்தைகளை  அடையாளப்படுத்தி அதற்கு எதிராக அறவழி போராட்டத்தை எடுக்க வேண்டும்.

எங்களுடைய பிரச்சனைக்கு நாங்கள் தான் போராட வேண்டும். தாய் தமிழகத்தில் ஏற்கனவே, தமிழக சட்டசபையில் ‘இனப்படுகொலை’ என்றும் ‘சர்வதேச விசாரணை’ என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதை போல மற்ற மாநிலங்களிலும், நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற பாடுபட வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் வாழும் நாட்டில் உள்ள தலைவர்களுக்கு, அந்த அந்த மொழியில் கடிதங்களை குழந்தைகள் மூலம் எழுத வேண்டும். இனப்படுகொலை கோரமாக நடந்த ஜுலை மாதத்திலேயே துவங்க வேண்டும். இதை போல அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள  பாராளுமன்றத்தின் முன் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி போராட்டம் நடத்த வேண்டும்.

இந்த ஒன்பது மாதங்களை சர்வதேசத்தின்  மனசாட்சி உலுக்கும் வண்ணம் போராட்டம் செய்தோமானால், எங்களை ஏமாற்ற முடியாது என நினைக்கிறேன். இதனை தாய் தமிழகம், புலம்பெயர் உறவுகள் செய்ய வேண்டும்.

Transitional justice என்கிற நிலை மாறும் நீதி என்பதனை எப்படி பார்க்கிறீர்கள்? இதனை  எதிர்த்து போராட்டம் கூட  நடைபெற்றுள்ளது. புகைப்படங்களை பார்த்து இருக்கிறோம். இது தமிழர்களுக்கு நீதியை கொடுக்குமா? இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

Transitional justice என்கிற நிலை மாறும் நீதி என்பது ஒரு வார்த்தை ஜாலமாக தான் இருக்கிறது. அவர்கள் ஒரு இரவில் எந்த மாற்றமும் வராது என்கிறார்கள். நீங்கள் பதினைந்து மாதங்களாக என்ன செய்தீர்கள் என்று தான் கேட்கிறோம். ராஜபக்சே கோர முகத்தோடு செய்ததை, இப்பொழுது சிரித்த முகத்தோடு அதே அநியாயத்தை செய்கிறீர்கள். புதிது புதிதாக காணிகளை அபகரிக்கிறார்கள். இருக்கக்கூடிய முகாம்கள் பலப்படுத்தப்படுகிறது.  சர்வதேசம் எதிர்பார்த்த ராணுவ வெளியேற்றம் கூட நடைபெறவில்லை. அரசியல் தீர்வு கூட, மாகாணசபை முறைக்கு ஒட்டு வைப்பதை போல பசைகளை பூசி வெள்ளை அடிக்கும் வேலையாகத்தான் நடக்கிறது. ஈழத்  தமிழினம் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டது என்று சர்வதேசத்தினை நம்பவைக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதன் மூலம்தான் எங்களுக்கு  நிகழ்ந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும். தேசிய நல்லிணக்கமோ அல்லது நிரந்தர சமாதானமோ அல்லது அரசியல் தீர்வோ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை  கிடைக்யாது என்பதனை சொல்ல முடியும்.

இப்பொழுது தேசிய நல்லிணக்கம் என்பது தேசிய கீதம் தமிழில் பாடுவதனால் ஏற்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையர் சொன்னாலும் இவ்வாறான பசப்பலான வார்த்தைகளை ஈழ தமிழினம் மற்றும் எங்களுக்கு ஆதரவான சக்திகள் நம்பக்கூடாது.

எதிர்கட்சி தலைவராக இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், இந்த அறிக்கை தொடர்ப்பாக என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளார்கள்; எப்படியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள்; அரசியல் சாசன மாற்றத்திற்கான பொதுவாக்கெடுப்பு வரப்போகிறது என்று ஐ.நா  மனித உரிமை ஆணையர் சொல்லி இருக்கிறார். இது குறித்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

இலங்கையில், புதிய அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றம், ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. இது புதிய அரசியல் அமைப்புச்சட்டம் என்று சொன்னார்கள். ஆனால், புதிய கோப்பையில் பழைய கள் என்பது போல தான், பூசி மொழுகிக்கொண்டு இருக்கிறார்கள். மோதகமும், கொளுக்கட்டையும் உள்ளுடல் ஒன்றாக வெளித்தோற்றம் வேறொன்றாக இருக்கிறது. எங்கள் தமிழ் மக்கள் சொல்லுவார்கள், இலங்கை சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து இரண்டு வருடமாக  தேசிய அரசாங்கம் என்று ஒரு ஏமாற்று வித்தையை காட்டுகிறார்கள் என்று. அவர்கள் உருப்படியான தீர்வை தர மறுத்தால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதினாறு  உறுப்பினர் ஆதரவு இல்லாமலேயே இலங்கை அரசால் வெற்றி பெற முடியும். ஆனால், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வை, எப்படி சர்வதேசம் அங்கீகரிக்கப்போகிறது? என்ற கேள்வி இருக்கிறது. எனவே தான், வரப்போகும் ஆண்டு ஐ.நா மனித உரிமை அவைக்கு ஈழத்தமிழர் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கப்போகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top