யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

french-soccer-03292016

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ்.

அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார்.

பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஹம்மல்ஸ் உள்ளிட்ட 3 முன்னணி வீரர்களின்றி களமிறங்கியது. அதேநேரத்தில் பிரான்ஸ் அணி முழு பலத்தோடு களம் கண்டது.

இரு அணிகளும் அபாரமாக ஆடியபோதும், பிரான்ஸ் அணியின் கோல் வாய்ப்பை அவ்வப்போது முறியடித்தார் ஜெர்மனி கோல் கீப்பர் மானுவேல் நூயர். முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “இஞ்சுரி’ நேரத்தில் ஜெர்மனி கேப்டன் ஸ்வெய்ன்ஸ்டீகர் பந்தை கையால் தடுத்ததாகக் கூறி அவரை மஞ்சள் அட்டையால் எச்சரித்த நடுவர், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆன்டைன் கிரிஸ்மான் கோலடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஸ்கோரை சமன் செய்ய ஜெர்மனி போராடியது. ஆனால் 72-ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் கீப்பர் தனது கைக்கு வந்த பந்தை நழுவவிட்டார். அப்போது கோல் கம்பத்தின் முன்னால் நின்ற கிரிஸ்மான் 2-ஆவது கோலை அடிக்க, பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

அப்போதே ஜெர்மனியின் இறுதிச்சுற்று கனவு தகர்ந்தது. இதன்பிறகு ஜெர்மனி போராடியபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

58 ஆண்டுகளில் முதல் வெற்றி:உலகக் கோப்பை, யூரோ கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் கடந்த 58 ஆண்டுகளில் முதல்முறையாக ஜெர்மனியை தோற்கடித்துள்ளது பிரான்ஸ். இடைப்பட்ட காலத்தில் பெரிய போட்டிகளில் 5 முறை ஜெர்மனியுடன் மோதியிருந்த பிரான்ஸ், அவையனைத்திலும் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. யூரோ கோப்பை போட்டியில் 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ். இதற்கு முன்னர் 1984, 2000 ஆகிய ஆண்டுகளில் யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய பிரான்ஸ், அந்த இரண்டிலுமே கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண்ணில் 1984-இல் நடைபெற்ற யூரோ கோப்பை, 1998-இல் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் பிரான்ஸ் அணி வாகை சூடியுள்ளது.

பிரான்ஸ் பயிற்சியாளர்

வெற்றி குறித்துப் பேசிய பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ், “இந்த ஆட்டம் கடுமையான ஆட்டம்தான். ஆனால் எங்கள் வீரர்கள் விடாப்பிடியாக போராடி வெற்றி கண்டுள்ளனர்.

எப்போதுமே எனது வீரர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். யூரோ கோப்பைக்கான பிரான்ஸ் அணியை ஒருங்கிணைப்பதற்காக நான் ஒரு வீரரை தேர்வு செய்தேன். அந்த வீரர் இப்போது சிறப்பாக ஆடி என்னை மகிழ்வித்துவிட்டார்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top