மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு மீறக் கூடாது

_Medical-graduate-entrance-examination-to-the-State-Supreme_SECVPF

ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தின்படி, பதற்றம் நிறைந்த பகுதிகளாக இருந்தாலும், ராணுவத்தினரோ அல்லது துணை ராணுவத்தினரோ தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறிச் செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் இந்திய ஆயுதப் படையினருக்கு வழங்கப்படும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோக்குர் மற்றும் ஆர்.கே. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற 1500-க்கும் மேற்பட்ட போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இந்திய ஆயுதப் படையினர் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புகளை மீறக் கூடாது.

மணிப்பூரில் போலி என்கவுன்ட்டர் என குற்றம்சாட்டப்பட்ட வழக்குகள் குறித்து ராணுவத்தினரே விசாரணை நடத்திக் கொள்ளலாம்.

மணிப்பூரில் இதுவரை நடைபெற்ற போலி என்கவுன்ட்டர்களின் விவரங்களை நீதிமன்ற ஆலோசகரிடம் அந்த மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளையில், ராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் போலி என்கவுன்ட்டர் குறித்த வழக்குகளை விசாரிக்க தங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கோரிக்கையும் ஆய்வு செய்யப்படும்.

62 போலி என்கவுன்ட்டர் வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யாதது உள்பட மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு போலி என்கவுன்ட்டர் வழக்குகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசுகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியன சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top