73 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்:பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கடிதம்

jaya

இலங்கைச் சிறையிலுள்ள 73 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

பாக். நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து கைது செய்வதும், சிறை வைப்பதும், தங்கு தடையின்றி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் தளத்திலிருந்து 3 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை காலை பிடித்துச் சென்றனர். பின்னர், இவர்கள் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களின் எண்ணிக்கை 73-ஆக உள்ளது.

இந்த நிலையில், இவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி…: பாக். நீரிணை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்கு நிரந்தரமான, அமைதியான-விரைவான தீர்வு காணுமாறு ஏற்கெனவே வலியுறுத்தி இருந்ததை மீண்டும் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தும் வகையில், இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

கச்சத்தீவை மீட்க வேண்டும்: 1974-76-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவு அரசியல் சாசனத்திற்கு முரணாக இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தகுந்த சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லையை மத்திய அரசு முடிந்துபோன விஷயமாக கருதக் கூடாது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையின் கீழ் உள்ளது. கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் தமிழக மீனவர்கள் அமைதியான முறையில், பாக் நீரிணையில் உள்ள தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலைச் செய்து வருவாய் ஈட்ட ஒரே வழியாகும். இதன் மூலம் இந்தச் சிக்கலான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

பிடிவாதமாக இருக்கும் அதிகாரிகள்: இலங்கை அதிகாரிகள் தாங்கள் பிடித்து வைத்துள்ள மீன்பிடி படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் விடுவிக்காமல், பிடிவாதமாக இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது. இதனால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இலங்கை அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல், போதுமான கவனிப்போ, பராமரிப்போ இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவை மீண்டும் கடலுக்குச் செல்லமுடியாத நிலைமை ஏற்படும்.

மீனவர்கள் உரிமையில்…: இதனால், ஏழை தமிழக மீனவர்களின் நிதி இழப்பு அதிகரிப்பதோடு, அவர்கள் பொருளாதார ரீதியில் அழிவைச் சந்திக்க நேரிடும். எனவே, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகளை இந்திய அரசு கூடிய விரைவில் விடுவித்து அவற்றைப் புதுப்பித்து தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் நலன்களையும், உரிமைகளையும் நிலைநிறுத்த இந்திய அரசு வலிமையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க உடனடியாக உத்தரவிட வேண்டும்.

கடுமையான, உறுதியான நடவடிக்கை தேவை: இந்தப் பிரச்னையில் தாங்கள் நேரடியாகத் தலையிட்டு, 3 படகுகளுடன் பிடித்துச் செல்லப்பட்ட 16 மீனவர்கள் உட்பட இலங்கைச் சிறைகளில் உள்ள 73 மீனவர்களையும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான அந்த நாட்டில் உள்ள 101 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு கடுமையான, உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்போதைய நிலைமை இதேபோன்று நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top