ஐரோப்பிய கால்பந்து; ஜெர்மனியை வீழ்த்தி முன்னேறியது பிரான்ஸ்! ஃபைனலில் போர்ச்சுகலை சந்திக்கிறது

யூரோ கோப்பை- ஐரோப்பிய கால்பந்து இறுதிச்சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் அந்த அணி, நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனியைத் தோற்கடித்தது.

5050

பிரான்ஸின் மார்சீலி நகரில் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில், பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதின. சர்வதேசப் போட்டிகளில் பிரான்ஸ் அணி கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் ஒன்றில்கூட தோற்கவில்லை. ஜெர்மனி அணி கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் தோற்கவில்லை. இதனால் இந்த ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள். உள்ளூர் அணியால் ஜெர்மனியின் ஆதிக்கத்தை வீழ்த்தமுடியுமா என்கிற கேள்வியும் எழுந்தது.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஜெர்மனியின் ஸ்வெய்ன்ஸ்டீகர் செய்த தவறால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி ஆண்டாய்ன் கிரீய்ஸ்மேன் முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தினாலும் அதனால் கோல் அடிக்க முடியாமல் போனது.

ஜெர்மனியின் மட் ஹம்மல்ஸ் ரெட் கார்டு காரணமாக இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. அதேபோல, மரியோ கோமேஸ், சமி கேதிரா ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் ஜெர்மனி அணிக்கு நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன. இது அந்த அணியின் வழக்கமான ஆக்ரோஷமான ஆட்டத்தைச் சிறிது பாதிக்கச் செய்தது. 72-வது நிமிடத்தில், கிரீய்ஸ்மேன் மற்றொரு கோலை அடித்து பிரான்ஸின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியில் 2-0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது பிரான்ஸ் அணி.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஜெர்மனி 9 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 13 ஆட்டங்களிலும் வாகை சூடியுள்ளன. 6 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. பெரிய அளவிலான போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நேற்றுதான் முதல்முறையாக பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

வரும் 10-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், போர்ச்சுகலைச் சந்திக்கவுள்ளது.

பிரான்ஸ் அணி இதற்கு முன்னர் சொந்த மண்ணில் நடந்த இரு யூரோ கோப்பை போட்டிகளிலும் (1984, 1998) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதனால் இறுதிச்சுற்றில் அந்த அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top