ஐரோப்பிய கால்பந்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல் ரொனால்டோ கோல் அடித்து கலக்கல்

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

European-football-after-beating-WalesPortugal-advanced-to_SECVPF15–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. லயன் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் போர்ச்சுகல்–வேல்ஸ் அணிகள் மோதின.

ரியல்மாட்ரிட் கிளப்புக்காக கைகோர்த்து ஆடும் கிறிஸ்டியானா ரொனால்டோவும் (போர்ச்சுகல்), காரெத் பாலேவும் (வேல்ஸ்) சர்வதேச களத்தில் முதல்முறையாக எதிரிகளாக மல்லுகட்டியதால் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதற்கு ஏற்ப இவ்விரு நட்சத்திர வீரர்களும் பந்தை கோலாக்குவதற்கு ஆக்ரோஷமாக செயல்பட்டனர். என்றாலும் முதல் பாதியில் இரு அணியின் போராட்டத்துக்கு பலன் கிடைக்கவில்லை.

பிற்பாதியில் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்திய போர்ச்சுகல், 50–வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் தடுப்பு அரணை வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து போர்ச்சுகல் வீரர் ராபெல் குயரீரோ உதைத்த பந்தை, கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். வேல்ஸ் வீரர் ஜேம்ஸ் செஸ்டர் பந்தை தலையால் முட்டி வெளியே தள்ளிவிட முயற்சித்தார். ஆனால் அவரை விட சற்று உயரமாக எழும்பி குதித்த ரொனால்டோ வச்சகுறி தப்பவில்லை.

இதனால் போர்ச்சுகல் வீரர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டனர். அடுத்த 3–வது நிமிடத்தில் போர்ச்சுகல் மேலும் ஒரு கோலை திணித்து அமர்க்களப்படுத்தியது. 53–வது நிமிடத்தில் ரெனட்டோ சாஞ்செசிடம் இருந்து பந்து ரொனால்டா வசம் சென்றது. அவர் கோலை நோக்கி அடித்த பந்து, சற்று விலகினார் போல் ஓடியது. அந்த சமயத்தில் போர்ச்சுகலின் இன்னொரு நம்பிக்கை வீரர் நானி, கனகச்சிதமாக பந்து போகும் திசையை மாற்றி அப்படியே வலைக்குள் திருப்பி அசத்தினார். நானி, ரொனால்டோ இருவருக்கும் இந்த தொடரில் இது 3–வது கோலாகும்.

அடுத்தடுத்து இரு கோல் வாங்கியதால் வேல்ஸ் அணியினர் திகைத்து போனார்கள். அவர்களின் முயற்சிகள் அனைத்தையும் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பாட்ரிசியோ எளிதில் முறியடித்தார்.

77–வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் டேனிலோ அடித்த ஷாட் மயிரிழையில் நழுவியது. பந்து வேல்ஸ் கோல் கீப்பர் ஹென்னெஸ்சியின் கையில் பட்டு கோல் லைனை தொடுவது போல் சென்றது. அதற்குள் சுதாரித்துக்கொண்ட ஹென்னெஸ்சி தட்டுத்தடுமாறி பந்தை பிடித்து விட்டார். இல்லாவிட்டால் வேல்ஸ் அணியின் நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். ஆனால் ரொனால்டோவுக்கு ‘பிரீகிக்’ அதிர்ஷ்டம் இல்லை. கிடைத்த இரண்டு ‘பிரீகிக்’ வாய்ப்பையும் வீணடித்தார்.

முடிவில் போர்ச்சுகல் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நடப்பு தொடரில் வழக்கமான நேரத்தில் (90 நிமிடம்) போர்ச்சுகல் அணி ருசித்த முதல் வெற்றி இது தான். அறிமுக போட்டியிலேயே அரைஇறுதிவரை வந்து வியப்பூட்டிய வேல்சின் கனவு இத்துடன் முடிவுக்கு வந்தது.

ஐரோப்பிய போட்டியில் போர்ச்சுகல் அணி இறுதிசுற்றை எட்டுவது இது 2–வது முறையாகும். இதற்கு முன்பு 2004–ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் கிரீசிடம் 0–1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது.

கால்பந்து வரலாற்றில் போர்ச்சுகல் அணி இதுவரை உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை என்று எந்த சர்வதேச பட்டத்தையும் வென்றதில்லை. நீண்ட கால இந்த சோகத்தை தணிக்க மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கனிந்துள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு நடக்கும் இறுதிப்போட்டியில் போர்ச்சுகல் அணி, ஜெர்மனி அல்லது பிரான்ஸ் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

ஆட்டநாயகன் விருது பெற்ற போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ கூறியதாவது:–

போர்ச்சுகல் அணி என்னை மட்டுமே நம்பி இல்லை. கூட்டு முயற்சியால் இறுதி சுற்றுக்கு வந்திருக்கிறோம். ஆனால் கோல் அடித்து வெற்றிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 2004–ம் ஆண்டு இறுதிப்போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அது தான் எனது முதல் ஐரோப்பிய போட்டி. அப்போது எனது வயது 18 தான். இப்போது மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறோம். இந்த முறை வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.

விரும்பியபடி எங்களுக்கு தொடக்கம் சரியில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த தொடர் உடனே முடிந்து விடுவதற்கு 100 மீட்டர் ஓட்டம் அல்ல. இது ஒரு மாரத்தான். நாங்கள் இறுதிசுற்றுக்கு முன்னேறுவோம் என்று நிறைய பேர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதை செய்து காட்டி பெருமைப்படுத்தி இருக்கிறோம். இதற்கு நாங்கள் தகுதியானவர்கள்.

பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தது இனிமையான விஷயம். நான் நிறைய சாதனைகளை முறியடித்து இருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன். ஆனால் அதை விட முக்கியம் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது தான். போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச மகுடம் சூட வேண்டும் என்பது தான் எனது கனவு என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். அந்த கனவை நனவாக்க இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.

இவ்வாறு ரொனால்டோ கூறினார்.

பயிற்சியாளர்கள் கருத்து

போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் கூறுகையில், ‘ஒரு பயிற்சியாளராக எனது வாழ்க்கையில் இது மிகப்பெரிய சாதனை. அணியில் உள்ள 23 வீரர்களையும் நினைத்து பெருமிதம் அடைகிறேன். இறுதிப்போட்டியில் யாருடன் மோதுகிறோம் என்பது குறித்து கவலையில்லை. எந்த அணி வந்தாலும் அவர்களின் பலம், பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்ப தயாராவோம்’ என்றார்.

வேல்ஸ் பயிற்சியாளர் கிறிஸ் கோல்மான் கூறும் போது, ‘தோல்வி வேதனைக்குரியது தான். ஆனால் அரைஇறுதி வரை முன்னேறி தேசம் பெருமைப்படும் வகையில் செய்து காட்டியிருக்கிறோம் என்பதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். போர்ச்சுகல் எங்களை விட அனுபவம் வாய்ந்த அணி. அவர்கள் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புள்ளது’ என்றார்.

பிளாட்டினியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

வேல்சுக்கு எதிராக 31 வயதான போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ அடித்த கோல் ஒட்டுமொத்த ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் அவரது 9–வது கோலாக அமைந்தது. இதன் மூலம் ஐரோப்பிய போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான பிரான்சின் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தார். பிளாட்டினி 1984–ம் ஆண்டு ஐரோப்பிய போட்டியில் மட்டும் 9 கோல்கள் (5 ஆட்டம்) அடித்திருந்தார்.

ஆனால் ரொனால்டோ இந்த எண்ணிக்கையை அடைவதற்கு 2004–ம் ஆண்டில் (2 கோல்), 2008 (1 கோல் ), 2012 (3 கோல்), 2016 (3 கோல்) என்று 4 ஐரோப்பிய தொடர்களில் மொத்தம் 20 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். ஐரோப்பிய போட்டியில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சிறப்பும் இவர் வசம் உண்டு. இறுதிஆட்டத்திலும் ரொனால்டோ கோல் போட்டால், பிளாட்டினியின் 32 ஆண்டு கால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்து புதிய சரித்திரம் படைப்பார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top