விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் செரீனா, ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ சூறாவளியுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 50–வது இடம் வகிக்கும் ரஷியாவின் எலினா வெஸ்னினாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா 6–2, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெஸ்னினாவை ஊதித்தள்ளினார். வெறும் 48 நிமிடங்களில் வெற்றிக்கனியை பறித்த செரீனா 9–வது முறையாக விம்பிள்டனில் இறுதிப்போட்டியை எட்டினார்.

பின்னர் 34 வயதான செரீனா கூறும் போது, ‘மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது நம்ப முடியவில்லை. இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் தோற்று இருக்கிறேன். எனவே இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார்.

மற்றொரு அரைஇறுதியில் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ், 4–ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) எதிர்கொண்டார். இதில் அபாரமாக ஆடிய ஏஞ்சலிக் கெர்பர் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் 5 முறை சாம்பியனான வீனசை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான கெர்பர், விம்பிள்டனில் இறுதிசுற்றை அடைவது இதுவே முதல் முறையாகும். நாளை நடைபெறும் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் செரீனா–ஏஞ்சலிக் கெர்பர் கோதாவில் இறங்குகிறார்கள்.

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் கூட்டணியுமான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தோல்வி அடைந்தது. இவர்களை டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணை 6–2, 6–4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7–6 (12–10), 6–1, 3–6, 4–6, 6–1 என்ற செட் கணக்கில் பிரான்சின் சோங்காவை சாய்த்தார். இந்த வெற்றியை வசப்படுத்த முர்ரே 3 மணி 53 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)– மிலோஸ் ராவ்னிக் (கனடா), ஆன்டிமுர்ரே– தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) ஆகியோர் மோதுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top