வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்

விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் கதை தேர்விலும் தோற்றத்திலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்கள் ரசனைகள் மாறி இருக்கிறது. 50, 60 கோடி செலவில் எடுக்கும் படங்களை கூட கதை திருப்தி இல்லை என்றால் ஒதுக்கி தள்ளி தோல்வி அடைய வைத்து விடுகிறார்கள். நல்ல கதையம்சத்தில் ரூ.3 கோடி செலவில் தயாராகும் சிறு பட்ஜெட் படங்களை ரூ.15, 20 கோடி என்று வசூல் ஈட்ட வைக்கிறார்கள். இதனால் கதை தேர்வில் பிரபல கதாநாயகன்-கதாநாயகிகள் மிகுந்த அக்கறை எடுக்கிறார்கள். படங்களின் எண்ணிக்கையை குறைத்து ரசிகர்களுக்கு பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

10-க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டு அவற்றில் ஒன்றை தேர்வு செய்து நடிக்கிறார்கள். வருடத்துக்கு ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் அவை வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை ஒவ்வொரு படத்திலும் பார்க்க முடிகிறது. தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி உடலை வருத்தி நடிக்கிறார்கள்.

விஜய் 1992-ல் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் வருடத்துக்கு நான்கு ஐந்து படங்கள் வரை நடித்தார். 1996-ல் அவர் நடித்து பூவே உனக்காக, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல் உள்ளிட்ட 5 படங்களும் 1997-ல் லவ்டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை உள்பட 5 படங்களும் திரைக்கு வந்தன. தற்போது படங்களின் பட்ஜெட் உயர்ந்துள்ளதால் ஒவ்வொரு படத்தையும் வெற்றி பெற வைக்கும் முனைப்பில் எண்ணிக்கையை ஒன்று, இரண்டு படங்களாக குறைத்து கதைக்காக மெனக்கெடுகிறார்.

2014-ல் அவர் நடித்து ஜில்லா, கத்தி படங்கள் வெளிவந்தன. கடந்த வருடம் புலி படமும் இந்த வருடம் தெறி படம் திரைக்கு வந்தன. தற்போது அவரது 60-வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை பரதன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

அஜித்குமார் 1993-ல் கதாநாயகனாக அறிமுகமானார். 1997-ல் நேசம், ராசி, உல்லாசம் உள்பட 5 படங்களும் 1999-ல் வாலி, அமர்க்களம், உன்னைத்தேடி உள்பட 6 படங்களும் அதிக எண்ணிக்கையாக அவர் நடித்து வெளிவந்தன. தற்போது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி வருடத்துக்கு ஒரு படத்தில் நடிக்க அக்கறை காட்டுகிறார். 2015-ல் என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்கள் அவர் நடித்து திரைக்கு வந்தன. இந்த வருடம் வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா டைரக்‌ஷனில் மீண்டும் நடிக்க உள்ளார். படபூஜை சென்னையில் நேற்று நடந்தது.

சூர்யாவுக்கும் இதுபோல் சினிமாவில் அறிமுகமான தொடக்கத்தில் வருடத்துக்கு அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளிவந்தன. இப்போது அதை குறைத்துக்கொண்டு இருக்கிறார். 2015-ல் மாசு, பசங்க-2 ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இந்த வருடம் 24 என்ற படம் வெளியானது. தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக தயாராகும் ‘எஸ்-3’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து கொம்பன் படத்தை எடுத்து பிரபலமான முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது.

விக்ரமும் படங்கள் எண்ணிக்கையை குறைத்து கதை மற்றும் தனது தோற்றங்களில் கவனம் செலுத்துகிறார். 2015-ல் அவர் நடித்து ‘10 எண்றதுக்குள்ள’ படம் மட்டும் திரைக்கு வந்தது. தற்போது நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த வருடம் இந்த ஒரு படம் மட்டுமே அவர் நடித்து வெளி வர இருக்கிறது. அடுத்த வருடம் திரு இயக்கத்தில் கருடா படத்தில் நடிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top