ராம்குமாருக்கு தெரியாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு தெரியாமலேயே அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற என்ஜினீயரிங் பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ராம்குமார் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘சுவாதியின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் ஒரு அப்பாவி. சுவாதியை கொலை செய்ய உண்மையான குற்றவாளியை கைது செய்யாமல், கிராமபுறத்தை சேர்ந்த ஏழையான என்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசார் கைது செய்யும்போது, என் கழுத்தை நானே அறுத்துக்கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால், நான் அறுக்கவில்லை. போலீசாருடன் வந்தவர்கள் தான் என் கழுத்தை பிளேடால் அறுத்தனர். எனவே, எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மாநகர அரசு வக்கீல், ‘இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெறும்போது, அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து யாரும் அணுகவில்லை. ராம்குமாரிடமும், அவரது உறவினர்களிடமும் வக்காலத்து மனுவை பெறாமல், இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால், இதை முதலில் தள்ளுபடி செய்யவேண்டும்’என்றார்.
உரிய அனுமதி
மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ‘இந்த ஜாமீன் மனு ராம்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வக்கீல் மகேந்திரன் தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் வாதம் செய்ய நான் ஆஜராகியுள்ளேன். குற்றவியல் விசாரணை முறைசட்டத்தின்படி, குற்றவாளியிடம் வக்காலத்து பெற்று ஜாமீன் மனு தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இந்த மனு உரிய அனுமதியை பெற்றபின்னர்தான், தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
அப்போது, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பெண் வக்கீல் சக்தி உள்பட பலர் ஆஜராகி, ‘ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று பெண்கள் அமைப்புகள் சார்பில் ஆஜராகுகிறோம். இந்த வழக்கில் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்கவேண்டும்’என்றார்கள்.
தெளிவுப்படுத்தவேண்டும்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெயசந்திரன், ‘இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு எடுப்பது குறித்து முதலில் முடிவு செய்யவேண்டும். பொதுவாக ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யும்போது, வக்காலத்து தாக்கல் செய்வதில்லை. இருந்தாலும், இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, முதலில் இதுகுறித்து மனுதாரர் வக்கீல் தெளிவுப்படுத்தவேண்டும். எனவே, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதி தள்ளிவைக்கிறேன்’என்று உத்தரவிட்டார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top