தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது: ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: –

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த வியூகம் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது, மத்திய அரசின் தவறான கொள்கையால் விலைவாசி அதிகமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனை கண்டித்து வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆந்திரா மாநிலம் பாலாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதால் தமிழகத்திற்கு பாசன நீர் மற்றும் குடிநீர் கிடைக்காத நிலை உருவாகும். உடனடியாக மத்திய மாநில அரசுகள் இதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் வழிப்பறி, கொலை கொள்ளை அதிகரித்துள்ளது.

எல்லா மாவட்டங்களிலும் கூலிப்படையினர் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியைக் கைது செய்ததால் அனைத்தும் சரியாகி விட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மாவட்ட மாநில வளர்ச்சிக்கு வரும் திட்டங்களை ஏற்போம். அந்த வகையில் குளச்சல் வர்த்தகத் துறைமுகத் திட்டத்தை ஆதரிக்கிறோம்.

சட்டப்பேரவையில் ஒருவார கூட்டத் தொடரில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி எதுவும் விவாதிக்கப்பட வில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளின் வரியைக் குறைத்து மக்கள் மீது மறைமுக வரி செலுத்தப்படுகிறது. இது தமிழக அரசின் கடன் சுமைக்குக் காரணமாக அமைகிறது. 500 மதுக்கடைகளை மட்டும் மூடியதோடு நிறுத்தாமல் பூரண மதுவிலக்கிற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top