விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

2730

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 28-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கியூரி 7-6 (6), 6-1, 3-6,

7-6 (5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை சாய்த்தார்.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் கடந்த 47 ஆண்டுகளில் “காலண்டர் கிராண்ட்ஸ்லாம்’ (ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களிலும் சாம்பியன் பட்டம் வெல்வது) வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆரம்ப சுற்றுகளோடு ஜோகோவிச் வெளியேறுவது 2009-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் தொடர்ச்சியாக 30 ஆட்டங்களில் வென்றிருந்தார்.

கடைசியாக விளையாடிய 28 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், இப்போது முதல்முறையாக அந்த வாய்ப்பை இழந்துள்ளார் ஜோகோவிச்.

ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி 7-5, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஆண்ட்ரே குஸ்நெட்சோவைத் தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் நிஷிகோரி, அடுத்த சுற்றில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் மரின் சிலிச் தனது 3-ஆவது சுற்றில் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவாக்கியாவின் லூகாஸ் லேக்கோவை வீழ்த்தினார். பிரான்ஸின் நிகோலஸ் மஹத் 7-6 (5), 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பியர் ஹியூஸ் ஹெர்பெர்ட்டை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிக்கி பெர்டென்ûஸ தோற்கடித்தார். மற்றொரு 3-ஆவது சுற்றில் ஜெர்மனின் கெர்பர் 7-6 (11), 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான மேன்டி மினெல்லாவை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஜப்பானின் மிசாகி டோயை சந்திக்கிறார் கெர்பர். மிசாகி தனது முந்தைய சுற்றில் 7-6 (1), 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அன்னே லீனாவை தோற்கடித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top