தெலங்கானாவில் நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்

u

தெலங்கானாவுக்கென தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி அந்த மாநில நீதித் துறை ஊழியர்கள் 8,000 பேர் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு இரண்டுக்கும் பொதுவாக ஹைதராபாத் உயர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆந்திரத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ஆகியோர் தெலங்கானா மாநில நீதிமன்றப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நடைமுறையை எதிர்த்தும், தனி உயர் நீதிமன்றம் கோரியும் தெலங்கானா நீதிபதிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட விதிகளை மீறியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 11 நீதிபதிகளை ஹைதராபாத் உயர் நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்தது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தெலங்கானாவை ஆளும் டிஆர்எஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆனால், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரிப்பதோ, நீதித் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதோ மத்திய அரசின் வரம்புக்குள் வராது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெளடா விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தெலங்கானா நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையில் பணியாற்றும் 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அகில இந்திய நீதித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் லட்சுமண ரெட்டி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரிக்க வேண்டும். நீதித் துறை ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

அதேபோல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மேல் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இந்த விவகாரத்தை முன்னிறுத்தி நீதித் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top