பிரதமர் மோடியுடன் உலக வங்கி தலைவர் சந்திப்பு

பிரதமர் மோடியை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் சந்தித்து பேசினார். இந்தியாவில் சூரிய மின்சக்தி விரிவாக்க திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.6,700 கோடி நிதியுதவி தருவதாக அறிவித்தது.

orld-Bank-chief-meets-PM-Modi-discusses-nutrition-green_SECVPFசூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் உபயோகத்தை பெருக்குவதை குறிக்கோளாக கொண்டு, இந்தியா தலைமையில் 121 நாடுகளைக் கொண்டு சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற அமைப்பு செயல்படுகிறது.

உலக அளவில் சூரிய மின்சக்தி உபயோகத்தை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்கும் விதத்தில், சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியுடன் உலக வங்கி நேற்று ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. இந்த உடன்பாடு, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மின்சார மந்திரி பியுஷ் கோயல், உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

அப்போது சூரிய மின்சக்தி விரிவாக்கம் என்னும் இந்தியாவின் லட்சிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிற வகையில், உலக வங்கி 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,700 கோடி) நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிதியானது, உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்துகிற கூரையில் சூரிய மின்தகடுகள் பொருத்தி சூரிய மின்சக்தி உற்பத்தி செய்தல், சூரிய மின்சக்தி பூங்காக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், புதுமையான சூரிய மற்றும் கலப்பு ரக மின்உற்பத்தி தொழில்நுட்பங்களை சந்தைக்கு கொண்டு வருதல், சூரிய மின்சக்தியை அதிகமாக உற்பத்தி செய்கிற மாநிலங்களுக்கு தடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் என உலக வங்கி கூறி உள்ளது.

வினியோக கட்டமைப்புடன், கூரைகளில் சூரிய மின்சக்தி பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசும், உலக வங்கியும் 625 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,187 கோடியே 50 லட்சம்) மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை (குறிப்பாக தளவாட துறையில்) எளிமைப்படுத்தி, அபாரமாக முன்னேற்றம் கண்டு இருப்பதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார்.

உலக வங்கியுடன் இந்தியாவின் தொடர்புகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி இருவரும் விவாதித்தனர். இந்தியாவும், உலகவங்கியும் எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதையை தேர்வு செய்து பின்பற்றுவதற்கு போதுமான நிதி வழங்க வேண்டியதன் தேவை குறித்தும் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம்மிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஸ்மார்ட் நகரங்கள், கங்கை நதியை சுத்திகரிக்கும் திட்டம், திறன் மேம்பாடு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம் போன்ற திட்டங்களில் உலக வங்கி தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதற்கு உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம்மிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top