எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப்போனதாகக் கூறவில்லை: வைகோ

    எனது ராஜதந்திரத்தால் திமுக தோற்றுப்போனதாகத் தான் கூறவில்லை. நான் கூறிய கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது என்றார் வைகோ.

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியது:

நடந்து முடிந்த சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளால் மதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஜனநாயக முறைப்படியோ கட்சிகளின் கொள்கை அடிப்படையிலோ தேர்தல் நடைபெறவில்லை. அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுமே இதுவரையில் இல்லாத வகையில் மக்களுக்கு பணத்தை கொடுத்தே வாக்குகளை பெற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை.

 மக்கள் நல கூட்டு இயக்கம் என்பது நான்கு கட்சிகளை கொண்ட நிரந்தர அமைப்பு. மக்கள் நலக்கூட்டணி என்பது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அணி.  அதில் இணைந்து போட்டியிட்டவர்கள் தற்போது வெளியேறுவது அவர்களது உரிமை. மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து வருகிற உள்ளாட்சி தேர்தலைச் சந்திப்போம்.

எனினும், தேமுதிகவுடனும் தமாகாவுடனும் அரசியல் ரீதியாக நல்ல நட்பும் நேசமும் நீடிக்கிறது.

திமுகவின் தோல்விக்கு  தன்னுடைய ராஜதந்திரம் தான் காரணம் என்று பேசியதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்த கேள்விக்கு,  தான் அப்படிக் கூறவில்லை. கருணாநிதி ராஜதந்திர மிக்கவர் என்றும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான முடிவை எடுக்கிறார். அந்த அளவுக்கு என்னிடம் ராஜதந்திரம் இல்லை என கருணாநிதி நினைக்கிறார். ஆனால், ஒரு போதும் எங்கள் கட்சியை அழிக்க விடமாட்டேன் என்றே கூறினேன். ஆனால், நான் கூறிய பலவற்றை மறைத்துவிட்டு சிலவற்றை மட்டும் தொகுத்து வெளியிட்டுள்ளனர். அது போல நான் கூறவில்லை. பத்திரிக்கைகளில் செய்திகள் தவறாக வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக் களத்தில் உள்ள வழக்குரைஞர்கள் எத்தகைய முடிவு எடுத்தாலும் தான் ஏற்கிறேன். வழக்குரைஞர்களின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டுவந்தால் அதை ஜனநாயக படுகொலையாகவே பார்க்க முடியும்.  தமிழகத்தி்ல் படுகொலைகள் நாள்தோறும் நடந்து வருகிறது. இதில் நுங்கம் பாக்கம் சுவாதியின் படுகொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இனிமேல் இதுபோன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார் வைகோ.

இதில், மாவட்டச்செயலர் க. சந்திரசேகரன் உள்பட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top