முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ரவி சாஸ்திரி:கங்குலி சாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் பொறுப்பு என அவர் நினைத்தால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் அர்த்தம் என முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சாடியுள்ளார்.

Gangulyஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. அந்தக் கமிட்டியில் சச்சின், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதன்பிறகு அனில் கும்ப்ளே புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனால் கோபமடைந்த ரவி சாஸ்திரி, “தனக்கு பயிற்சியாளர் பதவி அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. நான் நேர்காணலில் பங்கேற்றபோது, அங்கு கங்குலி இல்லை. அவர் என்னை அவமதித்துவிட்டார்’ என குற்றம்சாட்டியிருந்தார்.

அதைத்தொடர்ந்து அவருக்குப் பதிலடி கொடுத்துள்ள கங்குலி இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

ரவி சாஸ்திரியின் கருத்து தனிப்பட்ட தாக்குதல் ஆகும். தனக்கு பயிற்சியாளர் பதவி கிடைக்காததற்கு கங்குலிதான் பொறுப்பு என ரவி சாஸ்திரி கருதினால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் அர்த்தம். ரவி சாஸ்திரி நேர்காணலில் பங்கேற்றபோது, கமிட்டியில் நான் இருந்திருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணல் நடந்தபோது, பிசிசிஐயின் வேறு சில கூட்டங்களில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. அதனால் ரவி சாஸ்திரிக்கு நேர்காணல் நடைபெற்றபோது நான் கமிட்டியில் இல்லை.

பயிற்சியாளர் பதவி என்பது மிக முக்கியமான ஒன்று. அதற்கு நேர்காணல் நடந்தபோது ரவி சாஸ்திரி நேரில் வந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல், அவர் பாங்காக்கில் இருந்துகொண்டு விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணலில் கலந்துகொண்டது ஏன்?

அவர் என் மீது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்தது வேதனையளிக்கிறது. அவருடைய விமர்சனங்களை சில செய்தித்தாள்களில் பார்த்தபோதும், அதை நான் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அவருடைய கருத்துகள் தொலைக்காட்சிகளில் வெளியானபோது மிகுந்த வருத்தமடைந்தேன். அவர், கடந்த 20 ஆண்டுகளாக பிசிசிஐயின் பல்வேறு கமிட்டிகளில் இருந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர், அவரும் பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தியவர். அதனால் அவருக்கு அனைத்து விஷயங்களும் தெரியும்.

நேர்காணலின்போது முழுமையாக பங்கேற்க முடியாது என்பதை பிசிசிஐயிடம் இமெயில் மூலம் தெரிவித்தேன். அதை பிசிசிஐயும் ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரத்தில் பிசிசிஐயின் அனுமதி கிடைத்தவுடன் அந்த இமெயில் விவரங்களை அனைவருக்கும் அளிக்கிறேன் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top