தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அரச வன்முறை, ஆகியவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதன் பின் அங்கு தொடர்ந்து திட்டமிட்டு இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் ஆகியவையும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கம் போரின் போது கொத்துக் குண்டுகளை உபயோகித்ததற்கான பல்வேறு ஆதாரங்களும், குறிப்பாக தடை செய்யப்பட்ட, நோ ஃபயர் ஜோனில்  [No fire zone ]இலங்கை அரசாங்கம் குண்டுகளை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அமர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

mmmm

இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கலந்து கொண்டுள்ள அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 1948 முதல் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும் என்று கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடந்த அமர்வில் பேசி இருந்தார். மேலும், இந்தோனேஷியாவில் சிக்கி தவித்த தமிழீழ அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப மற்றொரு அமர்வில் கோரிக்கை வைத்து இருந்தார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் நடைபெறும் ஆணவப்படுகொலைகள் மற்றும் தமிழக தொழிலாளர்கள் இருவது பேர் ஆந்திர காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது ஆகியவற்றையும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு பதிவு செய்து இருந்தார்.

00

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமர்வில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான சர்வதேச தீர்ப்பாய விசாரணை வேண்டும் என்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக திருமுருகன் காந்தி கோரிக்கை வைத்தார்.

அதன் படி அந்த அமர்வில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :

  • 2008, 2012ஆம் ஆண்டுகளில் UPR(Universal Periodical review) கூட்டங்களில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
  • அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான தங்கள் கடமையிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகள், இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதில் தோல்வியடைந்திருப்பதாகவே எங்கள் அமைப்பு கருதுகிறது.
  • அடிப்படை உரிமையான சுய நிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தி, காலனியாக்கத்தின் விளைவினால் இத்தனை ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளை பாதுகாக்க வேண்டும்.
  • இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் ஈழத் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கப்பட்டதில்லை.
  • விசாரணை முறை என்பது முழுமையான சர்வதேசப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் அல்லது சர்வதேச தீர்ப்பாயம் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட உள்நாட்டு அல்லது கலப்பு விசாரணை முறைகளை ஏற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
  • இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை குற்றங்களுக்கு நீதி முறை, பிப்ரவரி 2015 இல் ஈழத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், பாராகுவே பாராளுமன்றம் 2015 இல் நிறைவேற்றிய இலங்கையின் மீது சர்வதேச விசாரணை கோரிய தீர்மானத்தினைக் கருத்தில் கொண்டும் சர்வதேச நீதிப் பொறிமுறை மேற்கொள்ளப் பட வேண்டும்.

கொத்துக்குண்டுகள் குறித்த ஆதாரங்கள் வெளியாகி அது இலங்கை அரசின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இலங்கை குறித்த மனித உரிமை ஆணையர் அல் ஹுசைனின் வாய்மொழி அறிக்கை இடம் பெறுகிறது. இதில் பிப்ரவரியில் அவர் மேற்கொண்ட நான்கு நாள் இலங்கை பயணத்தில் அவரது அனுபவம் மற்றும் அவர் கவனித்த விடையங்களும் இடம் பெரும் என்று தெரிகிறது. அல்- ஹுசைன் இலங்கை அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து சமூக ஆர்வலர்களால் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top