ஜெயில் பாதுகாப்பு போலீசாரிடம் விடுமுறை வழங்க லஞ்சம்: கைதான இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைப்பு

வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள் முதல் ஆயுள் தண்டனை கைதிகள் வரை ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் வேலூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு சிறப்புப்படை போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் திருமூர்த்தி என்பவர் போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் முதல்நிலை காவலராக பதவி உயர்வும் பெற்றுள்ளார்.

Inspector-obstruction-in-jail-for-holidays-offer-a-bribe-to_SECVPF

இந்த நிலையில் திருமூர்த்தியின் தந்தை தண்டபாணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமூர்த்தி தனது உயர் அதிகாரியான ஆபீஸ் கமாண்டன்ட் (இன்ஸ்பெக்டர்) பன்னீர்செல்வம் என்பவரிடம் 10 நாட்கள் விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு அவர் விடுமுறை அளிப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் 10 நாட்களுக்கு ரூ.2ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

அதற்கு திருமூர்த்தி ரூ.1,500 தருவதாக கூறியிருக்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் விடுமுறை அளிக்க ரூ.1500 மற்றும் பதவி உயர்வு பெற்றதற்கு விருந்து (பார்ட்டி) ரூ.500 என மொத்தம் ரூ.2 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் திருமூர்த்திக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. ஆனாலும் பணம் தருவதாகக் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் இதுபற்றி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை போஸ்காரர் திருமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அதை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம் கொடுக்கும்படி நேற்று அனுப்பி வைத்தனர்.

அதைபெற்றுக்கொண்ட திருமூர்த்தி. பாகாயத்தில் போலீசார் குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்றார். அவரை தொடர்ந்து லஞ்சஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, அசோகன் மற்றும் போலீசாரும் சென்று அங்கு மறைந்திருந்தனர். வீட்டில் இருந்த இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம், போலீஸ்காரர் திருமூர்த்தி ரூ.2 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் சென்று இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். தொடர்ந்து அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பன்னீர் செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வேலூர் ஜெயிலில அடைத்தனர்.

ஜெயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டரே லஞ்சம் வாங்கியதாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top