தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம்: வலுக்கிறது கோரிக்கை

5060_TRS Plenary_kcr

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆளும் டிஆர்எஸ் கட்சி எச்சரித்துள்ளது.

மேலும், மத்திய அரசு பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, சந்திரசேகர ராவின் மகளும், டிஆர்எஸ் கட்சி எம்.பி.யுமான கவிதா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் டிஆர்எஸ் எம்.பி.க்கள் பலமுறை குரல் கொடுத்துவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக் கோரிக்கையை தெலங்கானா முதல்வர் 10 முறை வலியுறுத்திவிட்டார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ஆந்திர மாநில நலன் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகிறாரே தவிர, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரிப்பது குறித்து ஒருபோதும் பேசுவதில்லை.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருக்குதல் காரணமாகத்தான் தெலங்கானாவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. மத்திய அரசின் பொறுப்பற்ற செயலால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார். இதைக் கண்டித்து தில்லியில் போராட்டம் நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம். ஆனால், நாங்கள் அந்த அளவுக்குச் செல்ல விரும்பவில்லை. ஒரு முதல்வர் தில்லியில் போய் போராட்டம் நடத்துவது அவ்வளவு நன்றாக இருக்காது என நினைக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் உயர் நீதிமன்றத்தைப் பிரிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கவிதா.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி மாநிலமாக தெலங்கானா பிரிக்கப்பட்டபோது பொது தலைநகரமாக ஹைதராபாத் செயல்படும் என்றும், ஆனால், குறிப்பிட்ட கால வரையறைக்குள் புதிய தலைநகரை ஆந்திரம் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஹைதாராபாத் உயர் நீதிமன்றம் மட்டும் பிரிக்கப்படாமல் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவானதாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு தொடர்பில்லை

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரிப்பது மத்திய அரசின் அதிகார வரம்பில் இல்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கெளடா விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பற்ற வகையில் செயல்படுவதாக டிஆர்எஸ் கட்சி குற்றம்சாட்டியிருப்பது குறித்து சதானந்த கெளடாவை தொடர்பு கொண்டு பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில்: தெலங்கானாவுக்காக புதிய உயர் நீதிமன்றம் அமைப்பது எங்கள் அதிகார வரம்பில் இல்லை.

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு பொதுவானதாக உள்ள ஹைதராபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் முதல்வர் ஆகியோரின் அதிகார வரம்பின்கீழ் இது வரும்.

புதிய உயர் நீதிமன்றத்துக்குத் தேவையான உள்கட்டமைப்புகளையும், இன்னபிற தேவைகளையும் முதல்வர் செய்து கொடுத்தால் மற்ற விஷயங்களை ஹைதராபாத் உயர் நீதிமன்றமே பார்த்துக் கொள்ளும்.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசை தெலங்கானா முதல்வரோ அல்லது வேறு யாருமோ குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. அதையும் மீறி அவர்கள் போராட்டம் நடத்தினால் மக்களே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார் கெளடா.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top