சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

அறிவுசார் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பில் (கே.பி.எப்.) ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் உள்ளனர். கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இந்த கூட்டமைப்பினர் சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், சித்தப்பா கோவிந்தராஜன் மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள், பயணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரின் கையிலும் மெழுகுவர்த்தி மற்றும் சுவாதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சுவாதி கொலை செய்யப்பட்ட போது அந்த சமயத்தில் அருகில் இருந்தவர்கள் எந்த உதவியும் செய்யாததை எடுத்துக்கூறும் வகையில், நாம் என்ன காது கேளாதவர்களா? வாய் பேச முடியாதவர்களா? என்ற வாசகங்களை சிலர் கையில் வைத்து இருந்தனர்.

இதுகுறித்து அறிவுசார் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பில் (கே.பி.எப்.) தலைவர் அழகு நம்பி வெல்கின் கூறியதாவது:–

சுவாதி கொலை சம்பவம் நடந்த போது ரெயில் நிலையத்தில் 30 பயணிகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இது வேதனைக்குரிய சம்பவம்.

சுவாதிக்கு நடந்தது போல் நாளைக்கு நம்மில் ஒருவருக்கு கூட நடக்கலாம். இனிமேல் வருங்காலத்தில் இதுபோல் ஒரு சம்பவத்தை நடக்க விடக்கூடாது. ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு இருந்தாலும், பாதுகாப்பு என்பது இல்லை.

எனவே ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அரசிடம், தொழிலாளர் நல ஆணையத்திடமும் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top