கேப்டனின் பணிச் சுமையை குறைப்பதே என் வேலை

ANIL-KUMBLE (1)

‘கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது பணி’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது:

ஒரு பயிற்சியாளராக, கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது முதல் வேலை. போட்டிகளின்போதான ஆட்டத்தின் ரீதியாகவும், அதைத் தவிர்த்த பிற விவகாரங்களிலும் பல முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது.

அந்த இரண்டிலுமே ஒரு முடிவை எடுப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை, நான் கேப்டனாக இருந்தபோது உணர்ந்துகொண்டேன். ஆகவே, கேப்டனின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், அதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவேன். அணியில் உள்ள வீரர்கள் மற்றும் தற்போது உள்ள சூழல் குறித்து முதலில் நான் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதைத் தொடர்ந்தே, தேவையான மாற்றங்கள் குறித்து சிந்திக்க இயலும்.

என்னைப் பொறுத்த வரையில், எனது கருத்துகளை அணி வீரர்களிடம் திணிக்க மாட்டேன். மாறாக, தகுந்த முறையில் எடுத்துரைத்து அனைவரையும் இணங்க வைக்க விரும்புகிறேன். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், எதையும் செயல்படுத்த இயலாது. செய்ய வேண்டியவற்றை செய்ய முடிந்தவனாகவே செயல்பட விரும்புகிறேன். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டின் பயிற்சியின் கீழ் அதிகம் விளையாடியுள்ளேன்.

அவரிடம் ஒரு ஆளுமைத் திறன் இருக்கும். அதையே நான் எனது பணியிலும் பிரதிபலிப்பேன். ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் என்ற முறையில், ஜான் ரைட்டை அணிக்கு அழைத்து வந்தேன். ஏனெனில், ஒரு பயிற்சியாளர் இந்தியாவில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதும், இந்திய கலாசாரம் குறித்தும் அவருக்கு அதிகம் பரிட்சயம் இருந்தது. அதேபோல், கேரி கிர்ஸ்டனுடன் சில காலம் பயணித்துள்ளேன். ஒரு பயிற்சியாளராக அணியின் பின்புலத்தில் இருக்கும் அவரது செயல்பாடு வெளியில் தெரிவதே இல்லை. நானும் அவ்வாறு பின்புலத்தில் செயல்படவே முயற்சிப்பேன்.

களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் ஒரு பயிற்சியாளராக இருக்க வேண்டும். சிறந்த குணமுடையவர்களாகவும், தலைமைப் பண்புடையவர்களாக வீரர்களை உருவாக்க முயற்சிப்பதே எனது பணி. அனைவரிடமும் அற்புதமான திறமைகள் உள்ளது. அதை வெளிக் கொண்டுவர வேண்டும். வெற்றி பெறும் காலங்களில் மட்டுமல்லாமல், கடுமையான நேரங்களிலும் ஒரு பயிற்சியாளராக இருக்க வேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்தொடரின் மூலம் எனது பணியை தொடங்குவதற்கு முன்பாக, பெங்களூரில் இந்திய அணி வீரர்களுடன் ஒரு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கோலி மற்றும் தோனியிடம் பேசினேன். அந்தத் தொடரில் 20 விக்கெட்டுகளை எடுப்பதே இலக்காக இருக்கும். அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாரான வகையில் அணியை மேம்படுத்துவதே எனது பணி. எதிர்பாராத விஷயங்களை திட்டமிட இயலாது. ஆனால், அவற்றைக் கையாளும் வகையில் தயாராக இருக்க இயலும்.
அணியில் இணைந்து பணியாற்ற இதுவே சரியான தருணம். ஒரு பயிற்சியாளராக, ஆலோசனைகள் மட்டும் வழங்காமல், அணி வீரர்களுடன் களமிறங்கி செயல்பட விரும்புகிறேன் என்று அனில் கும்ப்ளே கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top