செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’: வெளிநாடுகளில் நடைபெறும்

anuragthakur-1462953756 (2)

‘மினி ஐபிஎல்’ என்ற பெயரில் குறுகிய வடிவிலான புதிய டி20 போட்டியை வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டில் நடத்த உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டம் தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறியதாவது:
பிசிசிஐ, வரும் செப்டம்பர் மாதத்தில் “மினி ஐபிஎல்’ அல்லது “ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்ற பெயரில் போட்டி நடத்த உள்ளது. இதில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் 8 அணிகளும் பங்கேற்கும். குறுகிய வடிவிலான இப்போட்டியில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களே இருக்கும். வெளிநாட்டில் நடைபெறும் இப்போட்டி 2 வாரங்களுக்குள்ளாக நிறைவடையும் என்று அனுராக் தாக்குர் கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை கடந்த ஆண்டு முதல் ரத்து செய்துள்ள நிலையில், பிசிசிஐ இந்தகைய போட்டியை அறிமுகப்படுத்துகிறது. இப்போட்டி குறித்த இதர முடிவுகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனினும், அமெரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த மினி ஐபிஎல் போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெறுவது புதிதல்ல. கடந்த 2014ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாக அப்போதைய ஐபிஎல் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.

ஐபிஎல் போட்டியைப் பொறுத்த வரையில் பல ஆட்டங்களுடன் சுமார் 2 மாதங்களுக்கு நடைபெறும். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி நிறைவடைந்த 9ஆவது ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதற்கு, பிசிசிஐ செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
‘அன்டர்’ 19: அத்துடன், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (அன்டர் 19) கிரிக்கெட் போட்டி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒரு வீரர், அந்த அணியினருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒருமுறை மட்டுமே பங்கேற்க இயலும். அதேபோல், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியில் இணையும் ஒரு வீரர், 2 சீசன்களில் மட்டுமே விளையாட இயலும்.

தனி பட்ஜெட்: இதனிடையே, கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான பட்ஜெட் ஒன்று தனியே ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பிசிசிஐயும், மாநில கிரிக்கெட் சங்கங்களும் இணைந்து பணியாற்றும். ரஞ்சிக் கோப்பை: அத்துடன், ரஞ்சிக் கோப்பை போட்டிகளை நடுநிலையான இடங்களில் நடத்துவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top