தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை : மேரி கோம்

மேரி கோம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ள இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேரி கோம், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய மண்டல தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததன் மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கான முதல் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர், கடந்த மே மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மூலம் இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டார்.

இந்நிலையில், மேரி கோமிற்கு வைல்ட்கார்டு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் பரிந்துரையையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்தது.

இந்நிலையில், இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வைல்ட்கார்டு சுற்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனினும், இந்த விவகாரத்தில் என்னால் எதுவும் செய்ய இயலாது. இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

குத்துச் சண்டையில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறப்போவதில்லை. ஓய்வு பெறுவதென்பது நீண்ட யோசனைக்குப் பிறகு எடுக்க வேண்டிய முடிவு. நான் போதிய உடல் தகுதியுடன் தயார் நிலையில் இருக்கிறேன் என்ற எண்ணம் இருக்கும் வரையில் போட்டிகளில் கலந்துகொள்வேன். நான் தற்போது உடல் மற்றும் மன ரீதியாக தகுதியுடன் இருப்பதாகவே உணருகிறேன்.

தற்போது எனது குத்துச் சண்டை அகாதெமியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதில் அதிகம் நேரம் செலவிடுகிறேன். அதேவேளையில், எனக்கான பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ரியோ ஒலிம்பிக்கைத் தவிர்த்து இந்த ஆண்டில் வேறு எந்த போட்டிகளும் இல்லை. எனவே, யோசித்து செயல்படுவதற்கு எனக்கு அதிக நேரம் இருக்கிறது என்று மேரி கோம் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top