இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே

Anil-Kumble

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார்.

இதன்மூலம், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டுள்ளார்.

இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்காக விண்ணப்பித்திருந்தவர்களுடன் நேர்காணல் நடத்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, சிலரது பெயர்களையே பரிந்துரை செய்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் கலந்தாலோசித்து, அனில் கும்ப்ளேவை இந்திய அணிக்கான தலைமைப் பயிற்சியாளராக அடுத்த ஓராண்டுக்கு நியமிப்பதென ஒருமித்த கருத்துடன் முடிவு செய்யப்பட்டது.

வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து அனில் கும்ப்ளே தனது பணியைத் தொடங்குவார்.

இது, இந்தியர், வெளிநாட்டவர் என்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் பொறுப்புக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்பதன் அடிப்படையிலேயே முடிவு செய்தோம்.

இந்திய அணியில் விளையாடிய வீரர்களின் சேவைகளை நாம் பயன்படுத்திக் கொண்டுவருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளையில், இந்தியரைத் தான் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற வரையறையும் இல்லை. இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாளர் அமையவே விரும்பினோம்.

இந்திய அணிக்கான இதர துணைப் பணியாளர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சர்வதேச பயிற்சியாளர் என்ற அனுபவம் கும்ப்ளேவுக்கு இல்லாத போதிலும், பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் வழிவகுத்துள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் சாதனை படைத்ததை பயிற்சியாளர் பொறுப்புக்கான அவரது தகுதியாக பார்க்கிறோம். இருப்பினும், அவரது செயல்பாடு குறித்து ஓராண்டுக்குப் பிறகு ஆய்வு செய்யப்படும் என்று அனுராக் தாக்குர் கூறினார்.

பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே கூறுகையில், “அனில் கும்ப்ளே முன்பு வீரர்கள் பயிற்சி மையத்தை நடத்தியது தொடர்பாக, அவரது நியமனத்தின்போது கருத்து வேறுபாடுகள் ஏதும் எழவில்லை. அதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே அவரது நியமனம் முடிவு செய்யப்பட்டது’ என்றார்.

தேர்வு முறை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, லால்சந்த் ராஜ்புத், பிரவீண் ஆம்ரே, அனில் கும்ப்ளே, டாம் மூடி, ஸ்டுவர்ட் லா, ஆண்டி மோல்ஸ் உள்பட மொத்தம் 57 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் மட்டுமே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், செளரவ் கங்குலி ஆகியோர் அடங்கிய அந்தக் குழு, 10 பேரை தேர்ந்தெடுத்து கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணல் 10 மணி நேரம் நீடித்தது.இதனைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார்.

அனில் கும்ப்ளே: ஒரு பார்வை…

வலது கை சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே, 1990ஆம் ஆண்டில் 19ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

இந்திய அணிக்காக மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளிலும், 271 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டியில் 337 விக்கெட்டுகள் என மொத்தமாக 956 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்திலும், சர்வதேச அளவில் 3ஆவது இடத்திலும் அனில் கும்ப்ளே உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top