திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு குடிநீர், குளிர்பானம் விற்பனை: பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், குடிநீர், உணவுப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஏப்ரலில், எனது குடும்பத்தினருடன் பெரம்பூரில் உள்ள திரையரங்கில் (எஸ் 2) படம் பார்க்கச் சென்றேன்.படத்தின் இடைவெளியில் திரையரங்கு வளாகத்திலுள்ள உணவகத்தில் 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டிலை வாங்கினேன். இதற்கு விலையாக ரூ.30 பெற்றுக் கொண்டனர். அதேபோல், 400 மி.லி. கொள்ளளவு கொண்ட -மாஸா- என்ற குளிர்பானத்துக்கு ரூ.65 வாங்கிக் கொண்டனர்.

இந்த இரண்டும் ஹிந்துஸ்தான் கோகோ கோலா என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிறுவனம் நிர்ணயித்த சந்தை விலையை விட, பன்மடங்கு திரையரங்கில் அமைக்கப்பட்ட உணவகத்தில் வசூலிக்கின்றனர்.கூடுதல் விலை தொடர்பாக, சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு உரிய பதில் தர மறுத்தனர். அதேபோல், குடிநீர், குளிர்பானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டேன். சந்தை விலை விட, கூடுதல் விலைக்கு சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், காபி, குடிநீர், உணவுப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம். சத்தியநாராயணன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ஹிந்துஸ்தான் கோகோ கோலா நிறுவனம், திரையரங்கு நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top