புதிய அலைக்கற்றை ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

542147628

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான புதிய ஏலத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஏலம் மூலம் ரூ.5.66 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

அவற்றில் அலைக்கற்றை ஏலம் தொடர்பான ஒப்புதல் முக்கியமான ஒன்று. 2300 மெகாஹெட்ஸ் அலைவரிசையிலான அலைக்கற்றைகளை ஏலம் விட்டு குறைந்தது ரூ.64,000 கோடியாவது திரட்ட வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அதேபோல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிவிதிப்புகள் மூலம் ரூ.98,995 கோடி வசூலிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, 700 மெகாஹெட்ஸ் அலைவரிசையிலான அலைக்கற்றைகளை புதிதாக ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வகையான அலைக்கற்றைகளை ஏலம் விடுவதன் வாயிலாக மொத்தமாக ரூ.5.66 லட்சம் கோடி மத்திய அரசுக்குக் கிடைக்கலாம் எனத் தெரிகிறது. புதிய ஏலத்துக்கான அறிவிக்கை ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி ஏலம் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்தத் தேதிகள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 700 மெகாஹெட்ஸ் அலைவரிசையிலான அலைக்கற்றைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. அந்த வகை அலைவரிசை சேவையைப் பயன்படுத்துவதற்கு உகந்த சுற்றுச்சூழல் இன்னமும் மேம்படுத்தப்படவில்லை என்றும் அதன் காரணமாக அதன் பயன்பாடு குறையும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு மத்தியில், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு சில புதிய விதிகளை தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அலுவலகங்களுக்கு இடையேயான குழு பரிந்துரை செய்துள்ளது.

1 ஜிகாஹெட்ஸ் அலைவரிசைக்கு அதிகமான அலைக்கற்றைகளை (1800, 2100, 2300 மெகாஹெட்ஸ் அலைவரிசைகள்), ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், அதற்கான தொகையில் 50 சதவீதத்தை முதல்கட்டமாகவும், மீதமுள்ள தொகையை 10 ஆண்டுகளில் 2 தவணைகளாகவும் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 1 ஜிகாஹெட்ஸ் அலைவரிசைக்கு குறைவான அலைக்கற்றைகளை (700 அல்லது 800 மெகாஹெட்ஸ் அலைவரிசைகள்), ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், முதல்கட்டமாக 25 சதவீதத் தொகையும், 10 ஆண்டுகளில் 2 தவணைகளில் மீதத் தொகையும் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலர்ச்சி இந்தியா திட்டம்: இதனிடையே, பிரதமர் மோடியால் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்ட மலர்ச்சி இந்தியா (ஸ்டார்ட் அப் இந்தியா) திட்டத்துக்காக ரூ.10,000 கோடி நிதித் தொகுப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதிதாக 18 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் திட்டம்: இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் ரூ.2,272 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 144 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதைத்தவிர, ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பெருக்கும் வகையில் ரூ.6,000 கோடி சிறப்பு நிதி மற்றும் சலுகைகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மேலும், பிகாரில் கங்கை நதியின் மேல் அமைந்துள்ள மகாத்மா காந்தி பாலத்தை ரூ.1,742 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பதற்கும், இந்தியா – பெல்ஜியம் இடையேயான வரி விதிப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top