மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார்?திமுக -அதிமுக வாதம்

THANGAMANI

மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பாக திமுக-அதிமுக இடையே சட்டப்பேரவையில் வாக்குவாதம் நடைபெற்றது.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை பேசுகையில், விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது சட்டப் பேரவை அலுவலகத்தில் சந்தித்ததாக பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்தேன். ஆனால், விவசாயிகளுக்கு தீமையான மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், பத்திரிகையில் வந்த செய்தியைப் பற்றி பேரவையில் விவாதிக்க முடியாது என நீங்களே (பேரவைத் தலைவர்) கூறினீர்கள். ஆனால், இப்போது பத்திரிகையில் வந்த செய்தியைப் பற்றிச் சொல்கிறார். திமுக ஆட்சி காலத்தில் மீத்தேன் திட்டத்துக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும்தான் போடப்பட்டது. அதன்பின், அந்தத் திட்டம் மீது மக்கள் கருத்து கேட்க வேண்டும், தடையின்மைச் சான்றினைப் பெற வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தன. எனவே, அந்தப் பணிகளை அதிமுக ஆட்சியில்தான் தொடர்ந்திருக்க வேண்டும். எனவே, மீத்தேன் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தது போன்று பேசுவது சரியல்ல என்றார்.

இதற்கு, அமைச்சர் தங்கமணி அளித்த பதில்:

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியன்று, திமுக ஆட்சி காலத்தில் மீத்தேன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்ப்பானது என்பதால் முதல்வர் ஜெயலலிதா அதனை கைவிட்டார் என்றார். அமைச்சர் தங்கமணியின் கருத்தை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின், உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திட்டத்துக்கு புரிந்துணர்வு மட்டும்தான் போடப்பட்டது. அனுமதி தரப்படவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு, அரசாணை போட்டீர்களா, இல்லையா என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், அது திட்ட அனுமதிக்கான அரசாணை அல்ல என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top