ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் யார்?

listed

“பதவி நீட்டிப்பு வேண்டாம்’ என்று இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜன் கூறிவிட்ட நிலையில், அடுத்த ஆளுநர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆளுநரைத் தேர்வு செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆர்பிஐ துணை ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா உள்பட 12-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இப்பதவிக்குப் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ ஆளுநர் யார்? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். போட்டியில் உள்ளவர்களில் இப்போதைய ஆர்பிஐ துணை ஆளுநர் உர்ஜித் படேல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் திறமையாகச் செயல்படுபவர் என்று ரகுராம் ராஜனால் பாராட்டுப் பெற்றவர்.

அதேபோல எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ரகுராம் ராஜனின் பதவிக்காலமும் செப்டம்பரில்தான் முடிகிறது. எனவே அவருக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு ஊழலை வெளிக்கொண்டு வந்ததன் மூலம் பிரபலமானவர் வினோத் ராய், இப்போது, வங்கிகள் வாரியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். பொதுத் துறை வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கெüசிக் பாசு, வருவாய்த் துறை செயலாளர் சக்திகாந்தா தாஸ், நிதியமைச்சரின் ஆலோசகராக இருந்த பார்த்தசாரதி ஷோம், பிரிக்ஸ் வங்கி தலைவரும், ஐசிஐசிஐ வங்கியில் முக்கியப் பொறுப்பில் உள்ளவருமான கே.வி.காமத், செபி தலைவர் யு.கே.சின்ஹா, ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், சுபீர் கோகர்ண், நிதித்துறை முன்னாள் செயலர் விஜய் கேல்கர், சிசிஐ தலைவர் அசோக் சாவ்லா, பிரபல பொருளாதார நிபுணர் ஆர்.வைத்தியநாதன், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அசோக் லாகிரி உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top