இந்தியா என்எஸ்ஜி உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

sushma-swaraj

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சாதனைகளை விளக்கும் வகையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

இந்த ஆண்டில் இந்தியா என்எஸ்ஜி-யில் உறுப்பினராகும் என்ற நம்பிக்கை உள்ளது. என்எஸ்ஜி-யில் நமது நாடு உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை. அதில் உள்ள நடைமுறைகள் தொடர்பாகவே சுட்டிக்காட்டி வருகிறது. சீனாவுடன் பேசி அதனை சமாதானப்படுத்தி அந்நாட்டின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்பிக்கை உள்ளது. என்எஸ்ஜி-யில் உள்ள 48 நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தால் மட்டுமே அதில் இந்தியா உறுப்பினராக முடியும்.

இப்போதைய சூழ்நிலையில் இந்தியா என்எஸ்ஜி-யில் உறுப்பினராக இல்லை. எனவே பாகிஸ்தான் அதில் உறுப்பினராக இந்தியா ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வியே எழவில்லை. எனினும், தகுதியின் அடிப்படையில் எந்த நாடும் என்எஸ்ஜி-யில் உறுப்பினராகலாம். அதனை இந்தியா எதிர்க்காது என்றார் அவர்.

அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததைச் சுட்டிக்காட்டி என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் ஒருநாடு கையெழுத்திட்டால் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது.

மேலும், சர்வதேச அணுசக்தி முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட நாட்டின் அணுசக்தி மையங்களைச் சோதனையிட முடியும் என்பது போன்ற நிபந்தனைகள் உள்ளன.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தங்களுக்குத் தேவையான அணு ஆயுதங்களைத் தயாரித்து இருப்பில் வைத்துக் கொண்டு பிற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என்று கூறுவது தவறு என்பதை சுட்டிகாட்டி, அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்து வருகிறது.

வெளியுறவுச் செயலரின் ரகசிய பயணம்

 

இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், முன்னறிவிப்பு இன்றி கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அணுசக்தி விநியோகஸ்தகர்கள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக இடம்பெறுவதற்கு சீனாவிடம் அவர் ஆதரவு கோரினார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சீனா சென்று அந்நாட்டு வெளியுறவுச் செயலரை சந்தித்தது உண்மைதான்.

என்எஸ்ஜி அமைப்பில் இந்தியா உறுப்பினர் அந்தஸ்து கோரும் விஷயம் உள்பட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.

என்எஸ்ஜி மாநாடு வரும் 24-ஆம் தேதி தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறவுள்ள நிலையில் சீனாவிடம் இந்தியா ஆதரவு கோரியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top