மே.இ.தீவுகளை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா:ஆம்லா சதம்; இம்ரான் தாஹிர் – 7வி/45

66503

முத்தரப்புக் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் 139 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

அந்த அணியின் தொடக்க வீரர் ஆம்லா 110 ரன்கள் குவித்தார். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 45 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளை சரிவுக்குள்ளாக்கினார்.

செயின்ட் கிட்ஸில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதல் விக்கெட்டுக்கு 182: இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஹசிம் ஆம்லா-குயின்டன் டி காக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 33.1 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது.

89 பந்துகளில் சதமடித்த ஆம்லா, 99 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டி காக் 103 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து டெய்லர் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

பின்னர் வந்த கிறிஸ் மோரிஸ் 26 பந்துகளில் 40, டிவில்லியர்ஸ் 19 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். டூபிளெஸ்ஸிஸ் அதிரடியாக ரன் சேர்க்க, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா. டூபிளெஸ்ஸிஸ் 50 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73, டுமினி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கிரண் போலார்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இம்ரான் தாஹிர் அபாரம்: 344 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆன்ட்ரே பிளெட்சர்-ஜான்சன் சார்லஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்தது. பிளெட்சர் 21 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகளின் சரிவு ஆரம்பமானது.

இதன்பிறகு சார்லஸ் 49 ரன்களில் (41 பந்துகளில்) ஆட்டமிழக்க, பின்னர் வந்தவர்கள், தாஹிரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 38 ஓவர்களில் 204 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகளையும், ஷம்சி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தாஹிர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

சாதனைத் துளிகள்…

7-45மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 45 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் ஓர் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இம்ரான் தாஹிர். முன்னதாக அந்த அணியின் காகிசோ ரபாடா 16 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

3 ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-ஆவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமை தாஹிருக்கு கிடைத்துள்ளது. அப்ரிதி (7வி/12), முரளீதரன் (7வி/30) ஆகியோர் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற இரு சுழற்பந்து

வீச்சாளர்கள் ஆவர்.

14 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 110 ரன்கள் குவித்த ஆம்லா, அந்த அணிக்கு எதிராக 1,000 ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதன்மூலம் ஓர் அணிக்கு எதிராக அதிவேகமாக 1,000 ரன்கள் (14 இன்னிங்ஸ்களில்) குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின்

விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 15 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

58 ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை (58 ஆட்டங்களில்) வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பெளலர் என்ற பெருமை இம்ரான் தாஹிருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக மோர்ன் மோர்கல் 59 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இம்ரான் தாஹிர் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் (53),

நியூஸிலாந்தின் ஷேன் பான்ட் (54), ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (55) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top