21 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: அஜய் மாக்கன் நம்பிக்கை

313182-ajay-maken

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அவற்றை காங்கிரஸ் கட்சி நிச்சயம்  கைப்பற்றும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.

தில்லி அரசுத் துறைகளுக்கு பார்லிமென்டரி செயலர்களாக 21 எம்எல்ஏக்களை நியமித்த நடவடிக்கையில் பல உண்மைகளை ஆளும் “ஆம் ஆத்மி’ அரசு மறைத்து வருகிறது.

 தில்லி முதல்வராக ஷீலா தீட்சித் இருந்தபோது அவரது அரசில் நான் பார்லிமென்டரி செயலராக நியமிக்கப்பட்டேன். அந்த நியமனத்துக்காக, தில்லி சட்டப்பேரையில் நிதி  விவகாரத்துடன் தொடர்புடைய மசோதா முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பார்லிமென்டரி செயலர்களாக இருப்பவர்கள் தில்லி அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெறுகின்றனர். அந்த வகையில், தில்லியில் தற்போது ஆளும் ஆம் ஆத்மி  அரசு நியமித்த 21 எம்எல்ஏக்களுக்கு, பார்லிமென்டரி செயலர் பணிக்கான சம்பளம் வழங்கவில்லை என்று அரசு கூறினாலும், அரசு பங்களா, கார், அரசு ஊழியர்கள் போன்ற சலுகைகளை அவர்கள் பெறுகின்றனர். அதனால்தான் இதை ஆதாயம் தரும் பதவியாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

 ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், ஆளும் முதல்வருக்கு எதிராகத் திரும்பி விடக் கூடாது என்பதற்காகவும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருடன் அவர்கள் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் 21 எம்எல்ஏக்களுக்கு “அமைச்சர்’ அந்தஸ்துடன் கூடிய பார்லிமென்டரி செயலர் பதவியை கேஜரிவால் அளித்துள்ளார். இது அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது. அதனால்தான் இரட்டைப் பதவி வகித்து வரும் 21 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 21 பேரையும் தகுதி நீக்கம் செய்து அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும். அதன் பிறகு தில்லி பேரவையில் காங்கிரஸூக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்று வலுவாக நம்புகிறோம் என்றார் அஜய் மாக்கன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top