ஜூன் 23 வரை பேரவைக் கூட்டம்

sattaperavai_25609_2707911f

வரும் வியாழக்கிழமை (ஜூன் 23) வரை சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிப்பார் என அவர் கூறினார்.

சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா சக்ரபாணி, துணை கொறடா பிச்சாண்டி ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராமசாமியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் அளித்த பேட்டி:

வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், மறைந்த உறுப்பினர் சீனிவேலுக்கு இரங்கல் தீர்மானமும், நான்கு முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளும் வாசிக்கப்படும். அதன்பின், பேரவை ஒத்திவைக்கப்படும்.

சனி, ஞாயிறு விடுமுறைகளுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் கூடும் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும்.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் புதன்கிழமை வரை நடைபெறும்.

புதன்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பேரவை கட்சித் தலைவர்கள் தீர்மானத்தின் மீது உரையாற்றுவர்.

முதல்வர் பதிலுரை: விவாதங்களுக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமையன்று (ஜூன் 23) பதிலுரை அளிப்பார். மேலும், சட்ட முன்வடிவுகள் ஏதேனும் இருந்தால் அவையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

கேள்வி நேரம்: 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் இப்போது நடைபெறுகிறது. பேரவை தினமும் காலை 10 மணிக்குக் கூடும்.

பல்வேறு உறுப்பினர்களும் கேள்விகளை அளித்துள்ளனர். அவற்றுக்கான பதில்களைப் பெற 42 நாள்கள் அவகாசம் உள்ளது.

எனவே, எத்தனை கேள்விகளுக்குப் பதில் வருகிறதோ அவை பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும். அதைப் பொறுத்து கேள்வி நேரம் முடிவாகும்.

கருணாநிதிக்கு உரிய மரியாதை: சட்டப் பேரவையில் ஒரு உறுப்பினருக்கு உள்ள மரியாதையும், வசதியும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு செய்து தரப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் அதற்கு மேல் எதையும் பேச முடியாது என்றார் பி.தனபால்.

செய்தியாளர் சந்திப்பின் போது, பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top