அர்ஜென்டினா ஹாட்ரிக் வெற்றி; கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில்

கோபா அமெரிக்கா கால்பந்தில் அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டினா அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. மேலும் இந்த தொடரில் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றது.

டி பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அர்ஜென் டினா ஆதிக்கம் செலுத்தியது. 13-வது நிமிடத்தில் எரிக் லாமேலா ஃப்ரீகிக் மூலம் பொலிவியா வீரர்களின் தடுப்பு அரண்களை மீறி கோல் அடித்தார்.

அடுத்த 2-வது நிமிடத்தில் கோன்சாலா தலையால் முட்டி கொடுத்த பந்தை கோல் கம்பத்தின் மிக அருகே வைத்து கோலாக மாற்றினார் லாவெஸி. இதனால் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை வகித்தது. சர்வதேச போட்டிகளில் லாவெஸிக்கு இது முதல் கோலாகவும் அமைந்தது. 32-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்து அசத்தியது அர்ஜென் டினா. லாவெஸியின் கிராஸை பெற்று விக்டர் குயஸ்டா இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதியின் தொடக்கத்தில் மெஸ்ஸி களமிறங்கினார். 60-வது நிமிடத்தில் ஃப்ரீகிக் மூலம் அவர் அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. 81-வது நிமிடத்தில் பொலிவியா கோல்கீப்பரை தந்திரமாக மாற்றி கோல் அடிக்க மெஸ்ஸி முயன்றார். ஆனால் இது ஆப் சைடு என அறிவிக்கப்பட்டதால் மெஸ்ஸிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கடைசியாக 1979-ம் ஆண்டு அர்ஜென்டினா அணியை பொலிவியா வீழ்த்தியிருந்தது. அதன் பின்னர் அந்த அணி அர்ஜென்டினாவிடம் தோல்வியையே சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா காலிறுதியில் வெனிசுலாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top